உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உரையாற்றினார்.
Lucknow: யார் போராட்டம் நடத்தினாலும் குடியுரிமை சட்ட திருத்தமான CAA -யை திரும்பப் பெற மாட்டோம் எனறு, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய அவர் இவ்வாறு கூறினார்.
நாட்டின் பல்வேறு நகரங்களில் குடியுரிமை சட்ட திருத்தம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு உள்ளிட்டவற்றுக்கு எதிராக தொடர் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இந்த சூழலில் லக்னோவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அமித் ஷா, 'இங்கு ஒன்றை சொல்லிக் கொள்கிறேன். குடியுரிமை சட்ட திருத்தம் ஒருபோதும் திரும்பப்பெறப்பட மாட்டாது. யார் போராட்டம் நடத்தினாலும் சரி. எதிர்க்கட்சிகளால் நாங்கள் பயந்துபோகவில்லை' என்று பேசினார்.
லக்னோவில் குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக போராட்டங்கள் அதிகளவு நடக்கின்றன. இங்கு ஆண்ட கட்சிகளான சமாஜ்வாதி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிகளை அமித் ஷா கடுமையாக விமர்சித்தார். அவர் தனது உரையில், 'மம்தா பானர்ஜி, அகிலேஷ் யாதவ், மாயாவதி ஆகியோருக்கு ஒன்றை சொல்லிக் கொள்கிறேன். நாட்டின் எந்த இடத்தில் வேண்டுமானாலும் குடியுரிமை சட்ட திருத்தம் தொடர்பாக விவாதத்தை நாம் வைத்துக் கொள்ளலாம். பங்கெடுக்க நீங்கள் தயாரா?' என்று கேள்வி எழுப்பினார்.
குடியுரிமை சட்ட திருத்தம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் தவறான தகவல்களை அளிப்பதாகவும், இதுபோன்ற சட்டங்கள் தேவை என்றும், பிரிவினை மற்றும் வாக்குவங்கி அரசியலுக்காக காங்கிரஸ் கட்சி இதுபோன்ற காரியங்களில் ஈடுபடுவதாகவும் அமித் ஷா குற்றம் சாட்டினார்.
'மத்தியில் 10 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தது. அப்போது பாகிஸ்தானில் இருந்து வந்தவர்கள் இங்கு தீவிரவாத தாக்குதல்களை நடத்தினர். அப்போது மன்மோகன் சிங் எனும் மவுன சாமியார் அதுபற்றி கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை. இன்றைக்கு உத்தரப்பிரதேசம் பாஜகவுக்கு முழு ஆதரவு தெரிவித்ததால், மூன்றில் இரண்டு பங்கு ஆதரவுடன் மோடி மத்தியில் ஆட்சியை அமைத்துள்ளார்.' என்று அமித் ஷா பேசினார்.
குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டங்களால் உத்தரப்பிரதேசம் அதிக உயிரிழப்புகளை சந்தித்திருக்கிறது. இங்கு 20 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். துப்பாக்கிச் சூட்டை தாங்கள் நடத்தவில்லை என்று போலீஸ் தரப்பு கூறுகிறது. போராட்டக்காரர்களுக்கு துப்பாக்கி குண்டு காயம் ஏற்பட்டிருக்கிறது.
கடந்த ஒருவார காலமாக லக்னோவில் பெண்கள் அமைதியான முறையில் போராட்டம் நடத்தி வருகின்றனர். டெல்லி ஷாகீன் பாக்கில் நடைபெற்ற போராட்டத்தைப்போல இது அமைந்துள்ளது. இதற்கிடையே, போராட்டத்தை சீர்குலைக்க முயல்வதாக போலீசார் மீது குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அமைதிப் போராட்டத்தில் பங்கெடுத்தவர்களில் பிரபல உருது கவிஞர் முனவ்வர் ரானாவின் மகள்களான சுமையா ரானா, பவுசியா ரானா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
போலீசார் 24 மணிநேர கண்காணிப்பு பணியில் ஈடுபடுகின்றனர். அவர்கள் போராட்டக்காரர்களின் போர்வைகளை பறித்துச் சென்று விட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனை அவர்கள் மறுத்திருக்கிறார்கள்.
அண்டை நாடுகளான பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்க தேசத்தில் உள்ள முஸ்லிம் அல்லாத சிறுபான்மையினர் மத அச்சுறுத்தல் காரணமாக இந்தியாவுக்கு வந்தால் அவர்களுக்கு குடியுரிமை சட்ட திருத்தம் குடியுரிமையை வழங்கும். இது முஸ்லிம்களுக்கும், அரசியல் அமைப்பு சட்டத்திற்கும் எதிரானது என்று கூறி போராட்டங்கள் நாடு முழுவதும் நடந்து வருகின்றன.
இந்த சட்டத்திற்கும், தேசிய குடிமக்கள் பதிவேடு எனப்படும் என்.ஆர்.சி.க்கும் மாணவர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், அரசியல்வாதிகள், பெண்கள், ஏராளமான பிரபலங்கள் உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். முஸ்லிம்களை குறி வைத்து இந்த சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.