பிரதமர் நரேந்திர மோடியின் புதிய அமைச்சரவையில், அமித்ஷாவுக்கு உள்துறை அமைச்சகம் ஒதுக்கப்பட்டுள்ளது.
New Delhi: பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான புதிய அமைச்சரவையில், இடம்பெற்றுள்ள அமைச்சர்களுக்கு இலாகாக்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில், அமித்ஷாவுக்கு உள்துறை அமைச்சகமும், ராஜ்நாத் சிங்கிற்கு பாதுகாப்புத்துறையும், நிதின் கட்கரிக்கு மீண்டும் சாலை மற்றும் போக்குவரத்துத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்த நிர்மலா சீதாராமனுக்கு நிதித்துறை அமைச்சகம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஸ்மிர்தி இரானிக்கு பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சகம் ஒதுக்கப்படுள்ளது.
முந்தைய ஆட்சியில் வெளியுறவுத்துறை செயலராக இருந்து வந்த ஜெய்சங்கர், தற்போது, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். ராம்விலாஸ் பஸ்வானுக்கு நுகர்வோர் விவகாரம், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி வசம் அணுசக்தி, விண்வெளி, ஒய்வூதியம் மற்றும் அமைச்சர்களுக்கு ஒதுக்கப்படாத துறைகள் உள்ளன. நாடாளுமன்ற விவகாரத்துறை, நலக்கரி, சுரங்கத்துறை அமைச்சராக பிரலஹத் ஜோஷி நியமிக்கப்பட்டுள்ளார்.
2வது முறையாக டெல்லியில் நேற்று பிரதமராக மோடி பதிவியேற்றார். அவரைத்தொடர்ந்து, 57 அமைச்சர்களும் பதவியேற்றுக்கொண்டனர். இதில் கேபினட்டிற்கு 25 புதிய அமைச்சர்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.