This Article is From Feb 29, 2020

''சி.ஏ.ஏ. தொடர்பாக எதிர்க்கட்சிகள் பொய்களைப் பரப்புகின்றன'' - அமித் ஷா குற்றச்சாட்டு!

மத்திய அரசும், அமித் ஷாவும் குடியுரிமை சட்டத்தால் யாருடைய குடியுரிமையும் பறி போகாது என்றும், அண்டை நாடுகளில் மத அச்சுறுத்தலால் பாதிக்கப்பட்டவர்களுக்குக் குடியுரிமை அளிக்கும் என்றும் தெரிவித்து வருகின்றனர்.

குடியுரிமை சட்ட திருத்தம் யாருடைய குடியுரிமையையும் பறிக்காது என்கிறார் அமித் ஷா.

New Delhi/Bhubaneswar:

குடியுரிமை சட்டத் திருத்தம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் பொய்களைப் பரப்பி வருகின்ற என்றும், இந்த சட்டத்தால் யாருடைய குடியுரிமையும் பறிக்கப்படாது எனவும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா விளக்கம் அளித்துள்ளார்.

ஒடிசா மாநிலம் புவனேஸ்வரத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியதாவது-

குடியுரிமை சட்டத் திருத்தத்தால் சிறுபான்மையினரின் குடியுரிமை பறிக்கப்படும் என்று பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி, கம்யூனிஸ்ட், காங்கிரஸ், மம்தா உள்ளிட்டோர் கூறி வருகின்றனர். அவர்கள் ஏன் பொய்யுரைத்துக் கொண்டிருக்கின்றனர்?. குடியுரிமை சட்டத் திருத்தம் என்பது யாருடைய குடியுரிமையையும் பறிக்காது.

இவ்வாறு அவர் கூறினார். முதன்முறையாக மதத்தின் அடிப்படையில் குடியுரிமையைத் தீர்மானிக்கும் சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இதன்படி பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தானில் மத அச்சுறுத்தல் காரணமாக இந்தியாவுக்கு வரும் முஸ்லிம் அல்லாதோருக்குக் குடியுரிமை சட்டத்திருத்தம் குடியுரிமையை வழங்குகிறது. இதில் இஸ்லாமியர்களைத் தவிர்த்து என்று குறிப்பிட்டிருப்பதுதான் பிரச்சினையை ஏற்படுத்துகிறது.

இந்த சட்டம் இஸ்லாமியர்களுக்கும், அரசியலமைப்புக்கும் எதிரானது என்று கூறி நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகின்றன.

மத்திய அரசும், அமித் ஷாவும் குடியுரிமை சட்டத்தால் யாருடைய குடியுரிமையும் பறி போகாது என்றும், அண்டை நாடுகளில் மத அச்சுறுத்தலால் பாதிக்கப்பட்டவர்களுக்குக் குடியுரிமை அளிக்கும் என்றும் தெரிவித்து வருகின்றனர். 

எதிர்க்கட்சிகள் குறித்து விமர்சித்த அமித் ஷா, 'தவறான பிரசாரங்கள் மூலமாக மக்களை தூண்டிவிட்டு எதிர்க்கட்சிகள் வன்முறையை உருவாக்குகின்றன' என்றார்.

டெல்லியில் நடந்து வரும் வன்முறையில் இதுவரை 42 பேர் உயிரிழந்துள்ளனர். அங்கு போலீசார் உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளனர். உயிரிழப்புகளுக்காக உள்துறை அமைச்சகத்தை எதிர்க்கட்சியினர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். 

.