துப்பாக்கிச்சூடு போன்ற எந்த சம்பவத்தையும் மத்திய அரசு பொறுத்துக்கொள்ளாது என்று அமித் ஷா தெரிவித்துள்ளார்.
New Delhi: டெல்லி ஜாமியா மில்லியா பல்கலைக் கழகத்தில் உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த ராம்பக்த் கோபால் என்பவர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ள நிலையில் அதுபற்றி கருத்துக் கூறிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, குற்றவாளி தண்டிக்கப்படுவார் என்று உறுதி அளித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது-
துப்பாக்கிச்சூடு தொடர்பாக டெல்லி போலீஸ் கமிஷனருடன் பேசினேன். இதுதொடர்பாக குற்றவாளி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளேன். இதுபோன்ற செயல்களை மத்திய அரசு ஒருபோதும் பொறுத்துக் கொள்ளாது. இதனை முக்கிய பிரச்னையாக கருதுகிறோம். குற்றவாளிக்கு தக்க தண்டனை பெற்றுத் தரப்படும்.
இவ்வாறு அமித் ஷா கூறியுள்ளார். துப்பாக்கிச்சூடு தொடர்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது ட்விட்டர் பக்கத்தில், 'என்ன நடக்கிறது டெல்லியில்? இங்கு சட்டம் ஒழுங்கு மிக மோசமாகிக் கொண்டிருக்கிறது. தயவு செய்து டெல்லியின் சட்டம் ஒழுங்கை காப்பாற்றுங்கள்' என்று கூறியுள்ளார்.
டெல்லியில் போலீஸ், மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
துப்பாக்கிச்சூடு நடத்துவதற்கு முன்பாக ராம்பக்த் கோபால் சர்மா, தனது துப்பாக்கியை கருப்பு நிற ஜாக்கெட்டிற்குள் மறைத்து வைத்திருக்கிறார். போராட்டத்தில் சிறிது நேரம் பங்கேற்று விட்டு துப்பாக்கிச்சூட்டை அவர் நடத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சம்பவத்திற்கு முன்பாக அவர் பேஸ்புக்கில் லைவ் ஸ்ட்ரீமிங் செய்திருக்கிறார்.
போராட்டத்தில் சிறிது நேரம் பங்கேற்று விட்டு பின்னர், துப்பாக்கியை எடுத்து சுடத் தொடங்கினார். இதில் ஜாமியா பல்கலைக் கழகத்தின் மக்கள் தொடர்பியல் மாணவர் சதாப் பரூக் காயம் அடைந்திருக்கிறார்.
பின்னர், கூட்டதை நோக்கி துப்பாக்கியை காண்பித்து மிரட்டியவாறு, ராம்பக்த் கத்திக் கொண்டே சென்றார். இதையடுத்து போலீசார் அவரை சுற்றி வழைத்து கைது செய்தனர். அப்போது செய்தியாளர்களை நோக்கி தனது பெயர் 'ராம்பக்த் கோபால்' என்று அவர் கத்தியுள்ளார்.
கோபாலின் பேஸ்புக் பக்கத்தில் 'ஷஹீன் பாக் கேம் ஓவர்', 'அங்கிருப்பவர்களில் நான் மட்டுமே இந்து' என்பதுபோன்ற வாசகங்கள் இடம்பெற்றுள்ளன.
சில பிரியா விடை சம்பந்தமான வாசகங்களும் கோபாலின் பேஸ்புக் பக்கத்தில் உள்ளன. 'எனது கடைசி பயணத்தில், என்னை காவி நிற ஆடையில் போர்த்தி, ஜெய் ஸ்ரீராம் கோஷத்தை முழங்கி என்னை கொண்டு செல்லுங்கள்' என்று குறிப்பிட்டுள்ளார்.