அமித்ஷா பேசும்போது எடுக்கப்பட்ட வீடியோவில் சில உட்கட்சித் தகவல்கள் கசிந்துள்ளன
ஹைலைட்ஸ்
- அதிமுக கூட்டணியில் பாமக, பாஜக உள்ளன
- பாமக-வுக்கு கூட்டணியில் 7 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன
- பாஜக-வுக்கு கூட்டணியில் 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன
தமிழகத்தில் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக மற்றும் பாமக இணைந்துள்ளன. இதில் பாஜக-வுக்கு 5 தொகுதிகளும் பாமக-வுக்கு 7 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. கூட்டணி உறுதியானதைத் தொடர்ந்து நேற்று பாஜக தலைவர் அமித்ஷா தமிழகம் வந்தார். அவர் அதிமுக-வின் ஒருங்கிணைப்பாளுரும் தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகளை சந்தித்துப் பேசினார்.
அமித்ஷா பேசும்போது எடுக்கப்பட்ட வீடியோவில் சில உட்கட்சித் தகவல்கள் கசிந்துள்ளன. இரு கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் அமித்ஷா, ‘தமிழகத்தில் பல இடங்களில் இனி பிரசாரம் நடக்கும். அனைத்துப் பிரசாரங்களும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குக் கீழ்தான் நடத்தப்பட வேண்டும். அதற்குக் கீழ்தான் தமிழக முதல்வர், துணை முதல்வர் மற்றும் மற்ற கூட்டணிக் கட்சிகள் பங்கு பெற வேண்டும்' என்று ஓபிஎஸ்-க்கு உத்தரவிட்டார்.
அதிமுக தலைமையில் அமைந்துள்ள கூட்டணியில், பாஜக, மற்றவர்களுக்கு உத்தரவிடுவது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
அதிமுக தலைமையிலான கூட்டணியில் இன்னும் தேமுதிக, இந்திய ஜனநாயகக் கட்சி மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ் ஆகியவையும் இணையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் தேமுதிக, திமுக பக்கம் சாய்வதற்கும் வாய்ப்புள்ளதாக பார்க்கப்படுகிறது.