This Article is From Jul 10, 2018

2019 தேர்தலுக்கு முன் புதிய கூட்டணிகளுடன் பா.ஜ.க விரிவடையும் - அமித்ஷா

சென்னையில் நடைப்பெற்ற கூட்டத்தில், 15000-க்கும் மேற்பட்ட சக்தி, மஹா சக்தி கேந்திர உறுப்பினர்கள் கலந்துக் கொண்டனர்

2019 தேர்தலுக்கு முன் புதிய கூட்டணிகளுடன் பா.ஜ.க விரிவடையும் - அமித்ஷா
Chennai:

சென்னை: 2019 நாடாளுமன்ற தேர்தல் பணிகளை குறித்து ஆலோசிக்க பாஜக தலைவர் அமித்ஷா நேற்று சென்னை வந்திருந்தார். 

சென்னையில் நடைப்பெற்ற கூட்டத்தில், 15000-க்கும் மேற்பட்ட சக்தி, மஹா சக்தி கேந்திர உறுப்பினர்கள் கலந்துக் கொண்டனர். “பா.ஜ.க உடனான கூட்டணி கட்சிகளுக்கு மரியாதை அளிக்கப்படும். அடுத்த ஆண்டு நடக்கவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன், புதிய கூட்டணிகள் மூலம், தூய்மையான அரசை மக்களுக்கு அளிக்க வேண்டும்” என அமித்ஷா பேசினார்.

சக்தி கேந்திர உறுப்பினர்கள், ஐந்து வாக்குச்சாவடியில் கட்சி பணிகளை மேற்கொள்கின்றனர். மஹா சக்தி கேந்திர உறுப்பினர்கள், சக்தி கேந்திர உறுப்பினர்களின் பணிகளை மேற்பார்வையிட உத்தரவிடப்பட்டுள்ளது. கடந்த 2014 - ஆம் ஆண்டு தேர்தலுக்குப் பின்னர், நாட்டில் உள்ள பல்வேறு மாநிலங்களில் பா.ஜ.கஆட்சியை பிடித்துள்ளது. எனினும், தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு அடுத்தாண்டு நடக்கவிருக்கும் தேர்தலில் யாருடன் கூட்டணி வைப்பது, என்பது குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என அமித்ஷா தெரிவித்தார்.

மறைந்த முன்னள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் இறப்பிற்குப் பின்னர், அ.தி.மு.க கட்சி பின்னடைவை சந்தித்து வருகிறது. பா.ஜ.க உடன் நெருக்கமான நட்பில் ஆளும் கட்சி செயல்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. நடிகர் ரஜினிகாந்த்தின் அரசியலுடன் கைகோர்க்க பா.ஜ.க திட்டமிட்டது. எனினும், அது குறித்த தகவல்கள் எதுவும் உறுதியாகவில்லை. 

“தமிழ் பெருமையை குறித்து பேசும் கட்சிகள் தங்களின் கடமையை சரியாக செய்வதில்லை. பா.ஜ.க கட்சியை தவிர வேறு எந்த கட்சியும் தமிழர்களின், பெருமையை பாதுகாக்கப் பாடு படுவதில்லை. தமிழக அரசியல் கட்சிகள்,  ஐக்கிய முற்போக்கு கூட்டணியுடன் மத்தியில் இருந்த போது, இரயில் பயணச்சீட்டுகள் தமிழ் மொழியில் அளிக்கப்படவில்லை. நரேந்திர மோடியின் ஆட்சியில் தான் இது சாத்தியமானது. அனைத்து மாநிலத்தின் பாரம்பரிய பெருமையையும் பா.ஜ.க மதிக்கிறது” என்றார்.  மேலும், தமிழகத்தில் பா.ஜ.க ஆட்சி வந்தால், தமிழ் மொழியின் பெருமையை மற்ற இடங்களுக்கும் கொண்டு செல்லும். உலகின் பல்வேறு பகுதிகளிலும் தமிழ் மொழி கற்று கொள்ள ஆர்வம் உள்ளவர்களுக்கு, தேவையான முயற்சிகள் செய்யப்படும் என்றார்.

தமிழ்நாட்டில் பா.ஜ.க கட்சி பொறுப்பில் உள்ளவர்களை சந்தித்த அமித்ஷா, அடுத்த ஆண்டு நடக்கவிருக்கும் தேர்தல் குறித்த ஆலோசனை கூட்டம் அக்டோபர் மாதம் நடைப்பெறும் என்றார். வாக்குச்சாவடியில் பணிகளில் ஈடுபட உள்ள 1.25 லட்சம்,  பா.ஜக உறுப்பினர்கள் கூட்டத்தில் கலந்து கொள்வார்கள், அதில் பிரதமர் நரேந்திர மோடியும் பங்கேற்பார் எனவும் தெரிவித்தார்.

பிரதமர் நரேந்திர மோடி அறிமுகப்படுத்திய 120 திட்டங்களை, மக்கள் பயன்பெற மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கு கொண்டு செல்லுமாறு தமிழக பா.ஜ.க கட்சி உறுப்பினர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். தமிழகத்தில் உள்ள நகரங்களின் முன்னேற்றத்திற்காக, கடந்த நான்கு ஆண்டுகளில் 5 லட்சம் கோடி மதிப்புள்ள திட்டங்களை பிரதமர் மோடி செயல்படுத்தி உள்ளார் எனவும் அமித்ஷா கூறினார்.

“அவர்கள் (திமுக-காங்கிரஸ்) ஆட்சியின் போது, 13-வது நிதி கமிஷனில் இருந்து தமிழ்நாட்டிற்கு 94,540 கோடி ரூபாய் வழங்கப்பட்டது. மோடி ஆட்சியில் நடைப்பெற்ற 14-வது நிதி கமிஷனில் இருந்து 1,99,096 கோடி ரூபாய் அளிக்கப்பட்டுள்ளது” என்றார்.

“குஜராத், ராஜஸ்தான், சட்டிஸ்கர், மஹாராஷ்டிரா, ஹரியானா, அசாம், நாகாலாந்து, உத்தர பிரதேசம், உத்தர்கண்ட் உள்ளிட்ட 19 மாநிலங்களில் பா.ஜ.க ஆட்சியில் உள்ளது. ஆனால், தமிழகத்தில் இல்லை என்பதை எண்ணி வருந்துகிறேன். ஊழல் மிகுந்த மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்று. நாங்கள் ஆட்சிக்கு வந்தால், தமிழகத்தில் இருந்து ஊழலை அழித்துவிட முடியும். சரியான கூட்டணி அமைந்தால், பா.ஜ.க தமிழகத்தின் வளர்சிக்கு பாடுபடும்” என்றார்.

.