Kolkata: பாஜக தலைவர் அமித் ஷா இன்று கொல்கத்தா வந்தார். மாயோ சாலையில் நடக்கும் பேரணி ஒன்றில் அவர் கலந்துகொண்டார். இதையடுத்து, திரிணமூல் காங்கிரஸ் கட்சியினர் அப்பகுதி முழுவதையும் “மேற்கு வங்க விரோத பாஜகவே திரும்பிப் போ” என்னும் பொருளிலான போஸ்டர்கள், பேனர்களால் நிறைத்துள்ளனர். அசாம் தேசிய குடிமக்கள் பதிவேடு விவகாரத்தில் (NRC) ஆளும் பாஜ அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக இச்சுவரொட்டிகள் எல்லா இடங்களிலும் ஒட்டப்பட்டுள்ளன. மேலும் மாநிலம் தழுவிய போராட்டங்களை திரிணமூல் காங்கிரஸ் கட்சி முன்னெடுத்துள்ளது. அமித் ஷாவின் பேரணிக்கு எதிரான சதி என்று இதுபற்றி பாஜக கூறியுள்ளது.
முன்னதாக கொல்கத்தாவில் நடக்கும் அமித் ஷாவின் இப்பேரணிக்கு மம்தா பானர்ஜி அனுமதி மறுத்ததாக செய்திகள் வெளியாகின. எனினும் பின்னர் கொல்கத்தா போலிசார் இதற்கு அனுமதி வழங்கியுள்ளனர்.
“அரசு அனுமதி அளித்தாலும் அளிக்காவிட்டாலும் நான் கொல்கத்தா செல்வேன். முடிந்தால் அவர்கள் என்னைக் கைது செய்து பார்க்கட்டும்” என்று இதுகுறித்து மம்தா அரசுக்கு அமித் ஷா சவால் விட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
ஜூலை முப்பதாம் தேதி வெளியான அசாம் தேசிய குடிமக்கள் பட்டியலின் இறுதி வரைவில் 40 இலட்சம் மக்களின் பெயர்கள் விடுபட்டதை அடுத்து பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் போர்க்கொடி தூக்கியுள்ளன. “சிறுபான்மையினருக்கு எதிரான சதி” என்று மம்தா பானர்ஜி இதனைக் குறிப்பிட்டிருந்தார்.
மேற்கு வங்கத்தில் பாஜகவை வலுப்படுத்தும் நோக்கில் அமித் ஷா இப்பேரணியைத் திட்டமிட்டுள்ளார். 2014இல் நடந்த நாடளுமன்றத் தேர்தலில் பாஜக இங்கு இரண்டு தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. 2019இல் சரிபாதி தொகுதிகளை வெல்ல வேண்டும் என்று பெரிய இலக்குடன் பாஜக செயல்பட்டு வருகிறது.
அசாம் தேசிய குடிமக்கள் பதிவேட்டை முன்வைத்து மேற்கு வங்க அரசியல் நிலவரம் சூடுபிடித்துள்ளது. இப்பதிவேட்டால் உள்நாட்டுப் போர் வெடிக்கும், ரத்த ஆறு ஓடும் என்று மம்தா பானர்ஜி எச்சரித்திருந்தார். அமித் ஷா அதற்கு பதிலடியாக, “நீதிமன்றம் கூறியபடி இத்திட்டத்தை முழுமையாகச் செயல்படுத்திக் காட்டுவோம்” என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.