This Article is From Dec 17, 2019

''என்ன நடந்தாலும், குடியுரிமை சட்டத்தை அமல்படுத்தியே தீருவோம்'' : அமித் ஷா திட்டவட்டம்!!

குடியுரிமை சட்டத்தால் இந்தியக் குடிமக்களின் குடியுரிமை பறிக்கப்படாது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார்.

''என்ன நடந்தாலும், குடியுரிமை சட்டத்தை அமல்படுத்தியே தீருவோம்'' : அமித் ஷா திட்டவட்டம்!!

துன்புறுத்தப்பட்டு அகதிகளானவர்களுக்கு குடியுரிமை சட்டம் முக்கியத்துவம் அளிப்பதாக அமித் ஷா கூறியுள்ளார்.

New Delhi:

நாட்டின் பல்வேறு இடங்களில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராட்டங்கள் வெடித்துள்ள சூழலில், என்ன நடந்தாலும் குடியுரிமை சட்டத்தை அமல்படுத்திய தீருவோம் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார். 

டெல்லியின் துவாரகாவில் நடைபெற்ற பேரணியின்போது அமித் ஷா பேசுகையில், 'என்ன நடந்தாலும் சரி, மோடி அரசு இந்தியாவுக்கு அகதிகளாக வந்தவர்களுக்கு குடியுரிமை பெற்றுத் தரும். இந்தியர்களாக அவர்களை கண்ணித்துடன் வாழ வைக்கும்.

நமது மாணவர்கள், முஸ்லிம் சகோதர சகோதரிகள் இந்த சட்டத்தால் அச்சம் கொள்ளத் தேவையில்லை. யாரும் இந்திய குடியுரிமையை இழக்க மாட்டார்கள். இந்த சட்டம் இணைய தளத்தில் உள்ளது. அதை எல்லோரும் படித்து தெரிந்து கொள்ளலாம். காங்கிரஸ் கட்சி மக்களை தவறாக வழி நடத்துகிறது.

பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தானில் இருந்து அச்சுறுத்தல் காரணமாக வெளியேறிய அகதிகளுக்கு குடியுரிமை அளிப்பதுதான் இந்த சட்டத்தின் முக்கிய நோக்கம். அவர்கள் நேரு - லியாகத் ஒப்பந்தத்தின் அடிப்படையில் பாதுகாக்கப்பட்டிருந்தால் இப்படியொரு சட்டத்தை ஏற்படுத்தும் நிலை வந்திருக்காது. ' என்று தெரிவித்தார். சீலாம்பூர் பகுதியில் போராட்டங்கள் வெடித்திருக்கும் சூழலில் அமித் ஷா இவ்வாறு தெரிவித்துள்ளார். 

முன்னதாக குடியுரிமை சட்டத்தை எதிர்த்து நடைபெறும் போராட்டம் பற்றி ஜார்க்கண்டில் பேசிய மோடி, 'குடியுரிமை சட்டம் எந்த இந்திய முஸ்லிம் அல்லது இந்திய குடிமகனின் உரிமையை பறிக்கிறது? எதற்காக காங்கிரஸ் பொய் சொல்கிறது. காங்கிரசும், அதன் நண்பர்களும் முஸ்லிம்களை அச்சுறுத்தப் பார்க்கின்றனர். காங்கிரசின் பிரித்தாளும் கொள்கை காரணமாக நாடு ஏற்கனவே ஒருமுறை பிரிந்து விட்டது. காங்கிரசால் நாடு பல துண்டுகளாக ஏற்கனவே பிரிந்தது. அதனால் லட்சக்கணக்கானோர் இந்தியாவுக்குள் ஊடுருவி விட்டனர். அவர்களை காங்கிரஸ் வாக்கு வங்கியாக பயன்படுத்துகிறது' என்று பேசினார்.

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக கிழக்கு டெல்லி பகுதியான சீலாம்பூரில் நடைபெற்ற போராட்டம் வன்முறையாக மாறியது. பள்ளி வாகனம் ஒன்றும், போலீஸ் பூத்தும் தீயிட்டு கொளுத்தப்பட்டுள்ளது. 

செங்கற்கள் வீசப்பட்டதை தொடர்ந்து, போலீசார் தடியடி மற்றும் கண்ணீர் புகை குண்டுகளை பயன்படுத்தினர். சுமார் 2 ஆயிரம் பேர் இந்த போராட்டத்தில் பங்கேற்றிருப்பார்கள் என்று கருதப்படுகிறது. வன்முறையில் 2 போலீசார் காயம் அடைந்ததாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது.

.