This Article is From Dec 24, 2018

‘2019 தேர்தல் சாதரணமானதாக இருக்காது!’ - அமித்ஷா சூசகப் பேச்சு

சமீபத்தில் நடந்த 5 மாநில சட்டமன்றத் தேர்தலில், பாஜக ஒரு மாநிலத்தில் கூட வெற்றி பெறவில்லை

‘2019 தேர்தல் சாதரணமானதாக இருக்காது!’ - அமித்ஷா சூசகப் பேச்சு

வரும் மக்களவைத் தேர்தலில் தேசிய பாதுகாப்பு, அசாம் குடிமக்கள் பதிவேடு போன்ற விஷயங்களை பாஜக தீவிரமாக கையிலெடுக்கும் என்று அமித்ஷாவின் உரையின் மூலம் அறிய முடிகிறது

New Delhi:

சமீபத்தில் நடந்த 5 மாநில சட்டமன்றத் தேர்தலில், பாஜக ஒரு மாநிலத்தில் கூட வெற்றி பெறவில்லை. இதனால் அந்தக் கட்சியின் முக்கிய நிர்வாகிகள், 2019-ல் நடக்கவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கு கட்சித் தொண்டர்களை தயார் செய்யும் நோக்கில் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். பாஜக தலைவர் அமித்ஷா டெல்லியில் நடந்த கட்சிக் கூட்டத்தில் பேசுகையில், ‘கண்டிப்பாக வரும் மக்களவைத் தேர்தல் என்பது சாதாரணமாக இருக்கப் போவதில்லை. நாம் அனைவரும் அதை எதிர்கொள்ள தயாராவோம்' என்று சூசகமாக பேசியுள்ளார்.

அமித்ஷா மேலும் பேசுகையில், ‘நாம் காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகளை ஒரே தராசில்தான் வைத்துப் பார்க்க வேண்டும். இருவருக்கும் எந்த வேறுபாடும் இல்லை. 2019 தேர்தலில், 2014-ஐ விட மிகப் பெரிய வெற்றியைப் பெறுவோம். சாதியம் மற்றும் முதலாளித்துவத்தைவிட, தேசியம் பேசும் நமது கட்சிதான் வெற்றி வாகை சூடும்.

அரவிந்த் கெஜ்ரிவாலும், ராகுல் காந்தியும் தொடர்ந்து சொல்லி வரும் பொய்களின் எண்ணிக்கை, எண்ணிலடங்காதவை. அவர்கள் முன்னர் கொடுத்த வாக்குறுதிகளே இன்னும் நிறைவேற்றப்படாத நிலையில், புதுப் புது வாக்குறுதிகளை மக்களிடத்தில் கொடுத்து வருகின்றனர்.

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்திக்கு, பாரத் ரத்னா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று ஆம் ஆத்மி கேட்கிறது. அவர்களின் உண்மை முகம் தற்போதுதான் மக்களுக்குத் தெரிய ஆரம்பித்துள்ளது.

காங்கிரஸ் கட்சி தொடர்ந்து, அசாமில் குடியேறும் வேறு நாட்டினருக்கு ஆதரவு தெரிவித்து வருகிறது. அவர்களுக்கு இந்திய குடிமக்கள் குறித்து எந்தக் கவலையும் இல்லை. பாஜக மீண்டும் ஆட்சி பொறுப்பு ஏற்றவுடன், இங்கே இருக்கும் அனைத்து வெளிநாட்டினரும் திரும்ப அனுப்பப்படுவார்கள்' என்று பேசினார்.

வரும் மக்களவைத் தேர்தலில் தேசிய பாதுகாப்பு, அசாம் குடிமக்கள் பதிவேடு போன்ற விஷயங்களை பாஜக தீவிரமாக கையிலெடுக்கும் என்று அமித்ஷாவின் உரையின் மூலம் அறிய முடிகிறது.

.