Citizenship Act protests: அமித் ஷா தலைமையில் உள்துறை அமைச்சரவை கூட்டம்.
New Delhi: குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் தீவிர போராட்டம் மற்றும் வன்முறை நிகழ்ந்து வரும் நிலையில், நாட்டின் பாதுகாப்பு நிலை குறித்து ஆராய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் இன்று மாலை அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.
இந்த கூட்டத்தில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், உள்துறை இணை அமைச்சர் ஜி கிஷான் ரெட்டி, உள்துறை செயலாளர் அஜய் குமார் பால்லா உள்ளிட்டோர் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உள்துறை அமைச்சகத்தால், நாட்டில் நிலவி வரும் பதட்டமான சூழ்நிலை குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நாடு முழுவதும் புதிய குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக இரண்டாவது வாரமாக தொடர்ந்து ஆர்ப்பாட்டங்கள் நடந்து வரும் நிலையில், டெல்லி மற்றும் பெங்களூரில் நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்களை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், பல்வேறு பகுதிகளில் இணைய சேவை முடக்கப்பட்டுள்ளது.
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக கடந்த வாரம் நடந்த போராட்டங்களில் ஏற்பட்ட வன்முறை காரணமாக சட்டம் ஒழுங்கை காரணம் காட்டி, உத்தர பிரதேசம் மற்றும் கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் 144 தடை உத்தரவை அதிகாரிகள் பிறப்பித்துள்ளனர். இதேபோல், டெல்லியின் சில பகுதிகளிலும் இதேபோன்ற கட்டுபாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய குடியுரிமை திருத்தச் சட்டமானது, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்க தேசம் நாடுகளில் மத பாகுபாடு காரணமாக துன்புறுத்தப்படும் முஸ்லிம் அல்லாதவர்களுக்கு குடியுரிமை சட்டம் குடியுரிமையை வழங்குகிறது. இதில் முஸ்லிம்களுக்கு பாகுபாடு காட்டப்படுவதாகவும், அரசியலமைப்பு சட்டம் மீறப்படுவதாகவும் கூறி போராட்டங்கள் நடக்கின்றன.
பெங்களூருவில் இன்று போராட்டம் நடத்தியவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். கர்நாடகம் முழுவதும் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் பெங்களூரு டவுன் ஹாலில் போராட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பிரபல வரலாற்றாசிரியர் ராமச்சந்திர குஹா கைது செய்யப்பட்டார்.
கைதுக்கு பின்னர் NDTV க்கு அவர் அளித்த பேட்டியில், ‘காந்தி போஸ்டரை கையில் வைத்ததற்காகவும், இந்திய அரசியலமைப்பு சட்டம் குறித்து பத்திரிகையாளர்களிடம் பேசியதற்காகவும் போலீசார் என்னை கைது செய்துள்ளனர்' என்று தெரிவித்தார்.
(With inputs from agencies)