ராகுலை விமர்சித்த ராணுவ வீரரின் தந்தை! டிவிட்டரில் ஷேர் செய்த அமித் ஷா!
ஹைலைட்ஸ்
- ராகுலுக்கு பதிலடி கொடுத்த ராணுவ வீரரின் தந்தை
- வீடியோவை டிவிட்டரில் ஷேர் செய்த அமித் ஷா
- ராகுல் அரசியலை தாண்டி, தேச நலனுக்காக ஒற்றுமையுடன் நிற்க வேண்டும்
New Delhi: லடாக்கில் நடந்த இந்தியா-சீனா ராணுவ வீரர்கள் மோதலில் 20 இந்தியர்கள் உயிரிழந்தது தொடர்பாக ராகுல் காந்தி மத்திய அரசை கடுமையாக விமர்சித்து வரும் நிலையில், ராணுவ வீரரின் தந்தை ஒருவர் ராகுலுக்கு பதிலடி கொடுத்துள்ள வீடியோ ஒன்றை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.
அந்த வீடியோவில் அந்த முதியவர், ராகுல் காந்தி அரசியல் செய்யக்கூடாது என்று கூறியுள்ளார். இதுதொடர்பான அமித்ஷாவின் பதிவில், ஒரு துணிச்சலான ராணுவ வீரரின் தந்தை ராகுல் காந்திக்கு மிகத் தெளிவான செய்தியை தெரிவித்துள்ளார். ஒட்டுமொத்த தேசமும் ஒன்றுபட்டிருக்கும் நேரத்தில், ராகுல் காந்தியும் அரசியலை தாண்டி, தேச நலனுக்காக ஒற்றுமையுடன் நிற்க வேண்டும் என்று அந்த வீடியோவுடன் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
அந்த வீடியோவை ஏஎன்ஐ செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில், மஞ்சல் நிற தலைப்பாகை மற்றும் வெள்ளை குர்தா அணிந்த முதியவர் ஒருவர், இந்திய ராணுவம் வலிமைமிக்கது, சீனாவையும் இன்னும் பிற நாடுகளையும் வீழ்த்தும் ஆற்றல் பெற்றது. இதில், ராகுல் காந்தி அரசியல் செய்யக்கூடாது. ராணுவத்தில் சேர்ந்து என் மகன் போராடினான், அவன் மீண்டும் போராடுவான். அவன் விரைவில் குணமடைய கடவுளிடம் பிரார்த்தனை செய்கிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.
ராகுல் காந்தி லடாக் கால்வான் பள்ளத்தாக்கில் நடந்த இந்தியா-சீனா ராணுவ வீரர்கள் மோதலில் 20 இந்தியர்கள் உயிரிழந்தது தொடர்பாக ராகுல் காந்தி மத்திய அரசை தினமும் தனது ட்விட்டர் பதிவில் கடுமையாக விமர்சித்து வருகிறார்.
இந்நிலையில், இன்று காலை ராகுல், தனது ட்விட்டர் பதிவில், “சீனாவின் மூர்க்கதனத்திற்கு இந்தியாவின் நிலப்பரப்பை தாரைவார்த்துக் கொடுத்துள்ளார் பிரதமர் மோடி. சீனாவின் நிலத்தில்தான் அதன் ராணுவ வீரர்கள் இருந்தார்கள் என்றால், 1. எதற்காக நம் ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்? 2. எந்த இடத்தில் ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்?” என்று கேள்வி எழுப்பியிருந்தார்.
முன்னதாக பிரதமர் மோடி தலைமையில், நேற்று வீடியோ கான்ஃபரென்சிங் மூலம் நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி, மேற்கு வங்கத்தின் முதல்வர் மம்தா பானர்ஜி, மகாராஷ்டிர மாநிலத்தின் முதல்வர் உத்தவ் தாக்கரே, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.
அந்த கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “நம் எல்லைக்குள் யாரும் ஊடுருவி வரவில்லை. நம் நிலப்பரப்பையும் யாரும் ஆக்கிரமிக்கவில்லை. இந்தியா அமைதியையும் நட்பையுமே விரும்புகிறது. அதே நேரத்தில், இறையாண்மையை நிலைநிறுத்துவதுதான் எங்களின் உச்சபட்ச நோக்கம்,” என்று கூறியிருந்தார்.