இந்த குற்றச்சாட்டினை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
New Delhi: தேசிய அளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கக்கூடியவர்களின் எண்ணிக்கையானது 60 ஆயிரத்தினை நெருங்கிக்கொண்டிருக்கக்கூடிய நிலையில் புலம் பெயர் தொழிலாளர்கள், சிறப்பு ரயில்கள் மூலமாக தங்கள் சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.
இந்நிலையில் பல்வேறு மாநிலங்களில் சிக்கித் தவிக்கும் புலம் பெயர் தொழிலாளர்களைத் திரும்ப அழைப்பது குறித்து மேற்கு வங்க அரசு போதுமான ஒத்துழைப்பை மத்திய அரசுக்கு வழங்கவில்லை என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் சிக்கியுள்ள புலம் பெயர் தொழிலாளர்களை மீட்க இயக்கப்படும் ஷ்ராமிக் ரயில்களை மேற்கு வங்க அரசு அனுமதியளிக்கவில்லை என அமித்ஷா தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். இந்த செயல் நாடுமுழுவதும் பல்வேறு மாநிலங்களில் சிக்கித் தவிக்கும் மேற்கு வங்க புலம் பெயர் தொழிலாளர்களுக்கு இழைக்கப்படும் அநீதி என்றும் அமித்ஷா விமர்சித்துள்ளார்.
மேலும், இதுவரை இரண்டு லட்சத்திற்கும் அதிகமான புலம் பெயர் தொழிலாளர்கள் தங்கள் சொந்த மாநிலங்களுக்குத் திரும்ப மத்திய அரசு உதவியுள்ளதை சுட்டிக்காட்டியுள்ள அமித்ஷா, இவ்வாறு சிறப்பு ரயில்களை மாநிலத்திற்குள் அனுமதிக்க மறுக்கும் செயலானது, புலம் பெயர் தொழிலாளர்களுக்கான சிரமங்களை அதிகரிக்கும் என எச்சரித்துள்ளார்.
புலம் பெயர் தொழிலாளர்களுக்கான சிறப்பு ரயில் சேவையை மத்திய அரசு, எதிர்க்கட்சிகளின் அழுத்தத்திற்கு பிறகு அனுமதிப்பதாக அறிவித்திருந்தது. பின்னர் அதில் பயணிக்கும் தொழிலாளர்களுக்கு கட்டணம் வசூலிப்பதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. காங்கிரஸ் புலம் பெயர் தொழிலாளர்களுக்கான டிக்கெட் செலவினை ஏற்கும் என, அக்கட்சி தலைவர் சோனியா காந்தி சமீபத்தில் அறிவித்திருந்தார். அதன் தொடர்ச்சியாக மத்திய அரசு, தொழிலாளர்களுக்கான கட்டணத்தை ரயில்வே குறிப்பிட்ட அளவு ஏற்கும் என அறிவித்தது. கர்நாடகாவில் புலம் பெயர் தொழிலாளர்களுக்கான சிறப்பு ரயில் சேவை அனுமதிக்கப்படமாட்டாது என அம்மாநில முதல்வர் எடியூரப்பா அறிவித்திருந்தார். இந்த அறிவிப்புக்கு அம்மாநில முன்னாள் முதல்வர் சித்தராமைய்யா உட்டபட பலர் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். புலம் பெயர் தொழிலாளர்கள் மங்களூருவில் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இதன் பின்னர் கர்நாடகா புலம் பெயர் தொழிலாளர்களுக்கான சிறப்பு ரயில்கள் அனுமதிக்கப்படும் என அறிவித்தது.
சிறப்பு ரயிலில் செல்லும் புலம் பெயர் தொழிலாளர்கள் தொற்று பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு, அறிகுறிகள் தென்படுமாயின் தனிமைப்படுத்தப்படுவார்கள்.
மேற்கு வங்கத்திற்கான முதல் சிறப்பு ரயில் ராஜஸ்தானின் அஜ்மீரில் இருந்து அசன்சோல் வழியாக 1,200 புலம் பெயர் தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு துர்காபூருக்கு சென்றது. இதே போல கேரளாவிலிருந்தும் புலம் பெயர் தொழிலாளர்களை அழைத்துவர ஏற்பாடு செய்யப்படும் என பானர்ஜி தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.