அரவிந்த் கெஜ்ரிவால் பிரயாக்ராஜ் சென்று கங்கையில் மூழ்கி வர வேண்டும் என அமித் ஷா தெரிவித்துள்ளார். (File)
New Delhi: யமுனை நதி சுத்தமாக இருக்கிறது என்று அவர் என்னினால், ஒரு முறை யமுனாவில் நீராடி வர முடியுமா என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சவால் விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக டெல்லியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியதாவது, அரவிந்த் கெஜ்ரிவால் யமுனாவில் நீராடுமாறு நான் சவால் விடுகிறேன். அவர் அவ்வாறு செய்தால், யமுனா நதி இப்போது சுத்தமாக இருக்கிறது என்று நாங்கள் நம்புவோம்.
கெஜ்ரிவாலுக்கு எனது பரிந்துரை என்னவென்றால், அவர் பிரயாகராஜுக்குச் சென்று அங்குள்ள கங்கையில் நீராடி ஆறுகள் எவ்வாறு சுத்தமாக பராமரிக்கப்படுகின்றன என்பதை அறிய வேண்டும். பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் கங்கையை சுத்தமாக்குவதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர்.
அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சிக்கு வருவதற்கு முன்பு டெல்லி ஜல் வாரியம் ஒரு ஆண்டிற்கு ரூ.178 கோடி லாபத்தில் இயங்கியதாகவும், ஆனால் இன்று அது ஆண்டுக்கு 800 கோடி ரூபாய் இழப்பை சந்தித்து வருவதாகவும் அமித் ஷா குற்றம் சாட்டினார்.
அரவிந்த் கெஜ்ரிவால் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு அளித்த வாக்குறுதிகள் இன்றுவரை நிறைவேற்றப்படவில்லை. தேசிய தலைநகரில் 1,000 பள்ளிகளும் 50 புதிய கல்லூரிகளும் திறக்கப்படும் என்று அவர் உறுதியளித்தார். டெல்லியில் 15 லட்சம் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும் என்று அவர் வாக்குறுதி அளித்திருந்தார். 1.5 லட்சம் சி.சி.டி.வி கேமராக்கள் உண்மையில் நிறுவப்பட்டுள்ளன என்பதை நாங்கள் சரிபார்த்தோம், அதில் 1.25 லட்சம் கேமராக்கள் மத்திய அரசு வழங்கிய நிதியில் நிறுவப்பட்டுள்ளன.
ஆம் ஆத்மி கட்சி டெல்லியில் ஐந்து ஆண்டுகளாக ஆட்சியில் உள்ளது. ஒவ்வொரு வீட்டிற்கும் மின்சாரம், நீர், எரிவாயு ஆகியவற்றை யார் வழங்குவது என்பது குறித்து அரசுகளிடையே போட்டி நிலவுகிறது. ஆனால் பொதுமக்களிடம் பொய் சொல்வதற்கு ஒரு போட்டி இருந்தால், கெஜ்ரிவால் அரசாங்கம் முதலிடத்தில் இருக்கும், என்று அமித் ஷா குற்றம் சாட்டினார்.