பெண்கள் - குழந்தைகள் பாதுகாப்புக்காக ‘பிங்க்’ நிறம் கொண்ட அம்மா ரோந்து வாகனங்கள் அறிமுகம்!
சென்னையில், பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பிற்காக, முக்கிய இடங்களில் ரோந்து செல்ல, போலீசாருக்கு, 40 'அம்மா' ரோந்து வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதனை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இந்த ‘பிங்க்' நிறம் கொண்ட அம்மா ரோந்து வாகனங்கள் மூலம், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றச்செயல்களை தடுக்கவும், அவர்களுக்கு தேவையான பாதுகாப்பை உறுதி செய்யவும், சென்னை நகரத்திலுள்ள பள்ளிகள், கல்லூரிகள், பேருந்து நிலையங்கள், ரெயில் நிலையங்கள், வணிக வளாகங்கள், மார்க்கெட்டுகள், வழிபாட்டு தலங்கள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், கடற்கரை ஆகிய இடங்களில் ரோந்து பணிகள் மேற்கொள்ளப்படும்.
இதன்மூலம், பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்புக்கு தனி கவனம் செலுத்தப்படும். இதற்காக ரூ.7.5 கோடி செலவில் வாங்கப்பட்ட 40 வாகனங்களின் சேவையை முதல்வர் எடப்பாடி நேற்று தலைமை செயலகத்தில் துவக்கி வைத்தார்.
இந்த வாகனங்களை அழைக்க கட்டணமில்லாத தொலைபேசி எண்களை பயன்படுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 1091, 1098 ஆகிய எண்களைத் தொடர்பு கொள்ளலாம். பெண்கள், குழந்தைகளுக்கு ஏற்படும் சிரமங்கள், இன்னல்களை இந்த எண்களில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம். ரோந்து பணியிலுள்ள காவலர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீர்வு காண்பர்.
இதேபோல், தமிழகத்தில் முதல்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள குளிர்சாதன வசதி கொண்ட பேட்டரி பேருந்தை முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார். சென்னை சென்ட்ரல் முதல் திருவான்மியூர் வரை 28 கி.மீ. தூரம் வரை மின்சார பேருந்துகள் சோதனை ஓட்டத்தில் இயக்கப்பட உள்ளன.
பல்லவன் இல்லத்தில், பேருந்தின் பேட்டரி ரீசார்ஜ் செய்யும் வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது. பேட்டரி பேருந்தில் 32 பேர் அமர்ந்தும், 25 பேர் நின்றும் பயணிக்கலாம். முழுவதும் குளிர்சாதன வசதிகொண்ட பேட்டரி பேருந்தில், சிசிடிவி கேமரா வசதியும் உள்ளது.