This Article is From Feb 21, 2020

”அவர் பேசியது தவறு தான்” பாகிஸ்தான் ஆதரவு முழக்கமிட்ட பெண்ணின் தந்தை!

அந்தப் பெண்ணிற்கும் தனது கட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்று அந்த கூட்டத்தில் பங்கேற்ற ஹைதராபாத் எம்.பி., அசாதுதீன் ஓவைசி கூறியுள்ளார்.

”அவர் பேசியது தவறு தான்” பாகிஸ்தான் ஆதரவு முழக்கமிட்ட பெண்ணின் தந்தை!

அங்கிருந்தவர்கள் அமுல்யாவை மேலும் பேச விடாமல் தடுத்து நிறுத்தி அழைத்துச் சென்றனர்.

ஹைலைட்ஸ்

  • Amulya has been charged with sedition after she raised the slogan
  • Her father has criticized her for the chant
  • She was arrested last evening, sent to 14-day judicial custody
Bengaluru:

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராகப் பெங்களூரில் நடைபெற்ற போராட்டத்தின் போது பாகிஸ்தானுக்கு ஆதரவாக முழக்கம் எழுப்பியதாகத் தேசத்துரோக வழக்கில் இளம்பெண் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், ”அவர் பேசியது தவறு” என அந்த பெண்ணின் தந்தை தெரிவித்துள்ளார். 

சிஏஏவுக்கு எதிராகப் பெங்களூரில் நடந்த போராட்டத்தில் ”பாகிஸ்தான் ஜிந்தாபாத்” என முழக்கம் எழுப்பியதற்காகக் கைது செய்யப்பட்ட அமுல்யா என்ற அந்த இளம்பெண்ணை, 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக, வெளிவந்துள்ள வீடியோவில், இளம்பெண் அமுல்யா திடீரென மேடையேறி ”பாகிஸ்தான் ஜிந்தாபாத்” என முழக்கம் எழுப்புகிறார். உடனடியாக அசாதுதீன் ஓவைசி எம்.பி., அந்த பெண்ணிடமிருந்து மைக்கை பறிக்க முற்பட்டார். ஆனாலும், தொடர்ந்து அந்த பெண் பாகிஸ்தானுக்கு ஆதரவாக முழக்கங்களை எழுப்பினார். பின்னர் அங்குப் பாதுகாப்புப் பணியிலிருந்த காவலர்கள் அந்த பெண்ணிடமிருந்து மைக்கை பிடுங்கினர்.

தொடர்ந்து, மைக் எதுவும் இல்லாமல், மேடை முன்பு வந்த அமுல்யா, இந்துஸ்தான் ஜிந்தாபாத்துக்கும், பாகிஸ்தான் ஜிந்தாபாத்துக்கும் உள்ள வேறுபாடு என்னவென்றால்... என்கிறார். அப்போது, குறுக்கிடும் ஓவைசி அந்த பெண்ணிடம் என்ன பேசுகிறாய் என்கிறார். தொடர்ந்து, அங்கிருந்தவர்கள் அனைவரும் அந்த பெண்ணை மேலும் பேச விடாமல் தடுத்து நிறுத்தி அழைத்துச் சென்றனர். 

இதுதொடர்பாக ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு அமுல்யாவின் தந்தை அளித்த பேட்டியில், அமுல்யா கூறியது தவறு தான், அவர் சில இஸ்லாமியர்களுடன் சேர்ந்துகொண்டு எனப் பேச்சைக் கேட்க மறுக்கிறார் என்று விமர்சித்துள்ளார். 

இதுதொடர்பாக அசாதுத்தீன் ஓவைசி கூறும்போது, அந்தப் பெண்ணிற்கும் தனது கட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்று குறிப்பிட்ட அவர், சர்ச்சைக்குரிய அந்த பெண்ணிற்குத் தான் கண்டனம் தெரிவிப்பதாகவும், அந்த பெண்ணை இந்தக்கூட்டத்திற்கு அழைத்து வந்திருக்கக்கூடாது என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

மேலும், இப்படியான நிகழ்வுகள் இந்த மேடையில் நடைபெறும் என்று முன்னரே தெரிந்திருந்தால் தான் இங்கு வந்திருக்கவே மாட்டேன் என்றும், “நாங்கள் இந்தியாவுக்காக இருக்கின்றோம், எங்களுடைய எதிரி நாட்டினை நாங்கள் ஆதரிக்கவில்லை, எங்களுடைய முழு உந்துதலும் இந்தியாவை காப்பாற்றுவதற்கானதேயாகும்.” என்று ஓவைசி விளக்கம் அளித்துள்ளார்.

.