Statue of Unity: சிலைக்கு அருகாமையில் நர்மதா நதி பாய்ந்தோடுவது படத்துக்கு இன்னும் அழகு சேர்க்கும் விதத்தில் அமைந்துள்ளது
New Delhi: அமெரிக்காவைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று குஜராத்தில் சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடியால் திறந்து வைக்கப்பட்ட ‘ஒற்றுமைக்கான சிலை'-ஐ ஆகாயத்திலிருந்து படம் படித்திருக்கிறது.
‘ஸ்கை லேப்' என்ற அமைப்பால் இந்த புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. உலகின் மிக உயரமான சிலையின் இந்தப் படம் வைரலாக பரவி வருகிறது. படத்தில், ‘இரும்பு மனிதர்' சர்தார் படேலின் சிலை டாப் ஆங்கிலில் மிகப் பிரமாண்டமாக தெரிகிறது. சிலைக்கு அருகாமையில் நர்மதா நதி பாய்ந்தோடுவது படத்துக்கு இன்னும் அழகு சேர்க்கும் விதத்தில் அமைந்துள்ளது.
குஜராத் மாநிலம் நர்மதா மாவட்டத்தில் சாது பேட் என்ற சிறு தீவில் சர்தார் சரோவர் அணை அருகே, இந்த சர்தார் வல்லபாய் படேலின் ‘ஒற்றுமைக்கான சிலை' அமைந்துள்ளது. இது குஜராத்திற்கு பல்லாயிரக்கணக்கான சுற்றுலா பயணிகளை வருகை புரிய வைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிரதமர் நரேந்திர மோடியால் அக்டோபர் 31 ஆம் தேதி திறந்து வைக்கப்பட்ட இந்த சிலை, உலகின் மிகப்பெரிய நினைவுச் சின்னமாகும்.
இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சரும், சுதந்திரப் போராட்ட வீரருமான சர்தார் படேலின் 143வது பிறந்த நாளன்று அவரை கௌரவிக்கும் வகையில், 182 மீட்டர் உயரம் கொண்ட இச்சிலை திறந்து வைக்கப்பட்டது. உலகின் மிக உயரமான சிலை என்று சொல்லப்படும் இது, அமெரிக்காவில் இருக்கும் சுதந்திர தேவியின் சிலையை விட இரண்டு மடங்கு உயரமானது. இந்த சிலையை உருவாக்க 2,989 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளது.