கொல்லப்பட்ட இருவரும் ஷோபியன் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்று தெரிகிறது
Srinagar: ஜம்மூ - காஷ்மீர் ஷோபியன் மாவட்டத்தில் இன்று பாதுகாப்புப் படை வீரர்களுக்கு தீவிரவாதிகளுக்கும் இடையில் துப்பாக்கிச்சூடு நடந்தது. இந்த சம்பவத்தில் 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். அதில் ஒருவர் பாதுகாப்புப் படையிலிருந்து விலகி ஹிஸ்புல் முஹாஹீதின் தீவிரவாத அமைப்பில் சேர்ந்தவர் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தெற்கு காஷ்மீர் மாவட்டமான ஷோபியானில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக ராணுவத்தினருக்குத் தகவல் வந்தது. இதையடுத்து ராணுவ வீரர்கள், தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, ராணுவ வீரர்கள் மீது பதுங்கியிருந்த தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பு, ‘இன்று எங்கள் மீது தாக்குதல் நடத்திய நபர்கள் ஹிஸ்புல் முஜாஹீதின் அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதிகள் தான். அவர்கள் இந்தப் பகுதியில் தொடர்ந்து பல்வேறு சமூக சீர்கேடு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தது விசாரணையில் தெரிய வந்தது. இன்று நடந்த என்கவுன்ட்டரில் எங்கள் தரப்புக்கு பெரிதாக எந்த பாதிப்பும் ஏற்படவில்லை' என்று கூறியுள்ளது.
கொல்லப்பட்ட ஒரு தீவிரவாதியின் பெயர் இட்ரீஸ் சுல்தான் என்றும் அவர் மாநில பாதுகாப்புப் படையிலிருந்து சமீபத்தில் விலகினார் என்றும் தெரிய வந்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் சுல்தான், முஜாஹீதினில் சேர்ந்திருக்கிறார் என்று கூறப்படுகிறது.
உயிரிழந்த இன்னொரு தீவிரவாதியின் பெயர் அமீர் ஹுசைன் ராதர் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இருவரும் ஷோபியன் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்று தெரிகிறது.
‘என்கவுன்ட்டர் நடந்த இடத்திற்கு பொது மக்கள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. காரணம், அங்கு எதாவது வெடி பொருள் பதுக்கப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம்' என்று பாதுகாப்புப் படை தரப்பு தெரிவித்துள்ளது.