ஜெயலலிதா இறந்து இன்றோடு இரண்டாண்டுகள் கடந்துவிட்டன. அதன் பிறகு அதிமுக, தான் சந்தித்த ஒரேயொரு இடைத் தேர்தலிலும், படுதோல்வியடைந்தது. முதலில் கட்சியிலிருந்து பிரித்து விடப்பட்ட அணியிலிருந்த தினகரன், தற்போது தனிக் கட்சி ஆரம்பித்துவிட்டார். ஆனால், அதிமுக-வுக்கு அவர் கொடுக்கும் குடைச்சல் குறைந்தபாடில்லை. ஆளுங்கட்சியாக இருந்து கொண்டு, முக்கிய தலை இல்லாமல் அடுத்தடுத்து உள்ளாட்சித் தேர்தல், இடைத் தேர்தலை சந்திக்க இருக்கிறது அதிமுக. கட்சி வெற்றி பெற்று ஆதிக்கத்தைத் தொடருமா அல்லது தோல்வி கண்டு துவண்டு விழுமா என்பது அடுத்து வரும் மாதங்களில் தெரிந்துவிடும்.
இப்படிப்பட்ட சூழலில் ஜெயலலிதாவால் கட்சியின் செய்தித் தொடர்பாளராக நியமிக்கப்பட்ட ஆவடிக் குமாரிடம், கட்சி உள் விவகாரங்கள் பலவற்றைப் பற்றி பேசினோம். ‘அதிமுக சார்பில் கடந்த ஜனவரி மாதம் வெளியிடப்பட்ட செய்தித் தொடர்பாளர் பட்டியலில் உங்கள் பெயர் இடம் பெறவில்லை. இதனால் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு உங்களை ஒதுக்கி விட்டார்கள் என்று நினைக்கிறீர்களா..?' என்று ஆரம்பித்தோம்.
“அப்படியெல்லாம் நான் நினைக்கவில்லை. எனது பெயர் 12 பேர் கொண்ட செய்தித் தொடர்பாளர் பட்டியலில் இல்லையே தவிர, என்னை யாரும் நீக்கி உத்தரவிடவில்லையே… ஆகையால் நான் தொடர்ந்து பேசுவேன். அதிமுக-வின் பேச்சாளர் தான் நான்” என்று கட் அண்டு ரைட்டாக பதிலளித்தார்.
தொடர்ந்து, ‘ஜெயலலிதா இல்லாததனால், தலைமை பொறுப்பில் இருக்கும் ஓபிஎஸ் - ஈபிஎஸ் இடையில் மோதல் போக்கு இருந்து வருவதாக செய்திகள் அடிபடுகின்றனவே' என்றோம். அதற்கு, “ஆரோக்யமான ஜனநாயகபூர்வமான கட்சி ஒன்று இருக்கையில், அந்தக் கட்சிக்குள் சில கருத்து வேறுபாடுகள் வரத்தான் செய்யும். அதை வைத்து, இருவருக்கும் இடையில் மோதல் என்பது போல வதந்திகள் பரப்பப்படுகின்றன. அவர்கள் இருவருக்கும் இடையில் சில மாற்றுக் கருத்துகள் இருந்தாலும், அது குறித்து யாரும் கவலை கொள்ள வேண்டாம்.
பலர், அதிமுக இப்போது இரண்டு அணிகளாக பிரிந்திருக்கிறது என்று சொல்கிறார்கள். நான் அதை ஏற்கமாட்டேன். 95 சதவிகித தொண்டர்கள் ஜெயலலிதாவின் பாதையில் அதிமுக-வில் தான் இருக்கிறார்கள். அவர்கள் எந்த இடத்திற்கும் தாவவில்லை. கட்சிக்கு எத்தனை சோதனைகள் வந்தாலும் அதைத் தொண்டர்கள் சமாளித்து விடுவார்கள். இந்தக் கட்சியின் பலமே, அதன் அசைக்க முடியாத தொண்டர் படைதான்' என்றார் தீர்க்கமாக.
‘இன்று காலை ஓபிஎஸ் - ஈபிஎஸ் தலைமையில் அதிமுக, ஜெயலலிதா நினைவு நாளையொட்டி அமைதி ஊர்வலம் நடத்துகிறது. அதற்கு கூட்டம் கூடுகிறது. சிறிது நேரம் கழித்து, தினகரன் தலைமையில் அமைதி ஊர்வலம் நடத்தினால் அதற்கும் கூட்டம் கூடுகிறது…' என்று கேள்வியை முடிப்பதற்குள், “தினகரனுக்கு வருவதற்கு பெயர் கூட்டமா. ஒரு 10,000 பேரை உருவாக்கி வைத்துள்ளார். தமிழகத்தில் அவர் எங்கு போனாலும், அங்கு அந்த பத்தாயிரம் பேர் வரும்படி பார்த்துக் கொள்கிறார். இதனால், மக்களும் ஊடகங்களும் அவருக்கு எக்கச்சக்கக் கூட்டம் சேர்வதாக நினைத்துக் கொள்கின்றனர்.
சும்மா, ஒரு இடத்தில் ஒரு விஷயம் செய்யப் போவதாக அறிவித்துவிட்டு, சித்தரிக்கப்பட்ட கூட்டத்தை சேர்த்துக் கொண்டு தினகரன் அரசியல் நடத்துகிறார். அவர் தைரியம் இருந்தால், தமிழகத்தின் அனைத்து முக்கிய இடங்களிலும் ஒரே நேரத்தில் கூட்டம் சேர்க்கட்டும். அது தினகரனால் முடியுமா? அதிமுக அதைத் தான் இன்றளவும் செய்கிறது. அதை அவரால் என்றும் செய்ய முடியாது.
ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் வெற்றியை வைத்துக் கொண்டு அவர் இன்னும் வலம் வந்து கொண்டிருக்கிறார். அந்த ஒரு தேர்தலை வைத்து, தமிழக அரசியலை தீர்மானிக்க முடியாது. எப்போது எந்தத் தேர்தல் வந்தாலும் தொண்டர்களுடைய ஆதரவினாலும், லட்சோப லட்ச தமிழக மக்களின் ஆதரவினாலும் அதிமுக தான் வெற்றி வாகை சூடும். ஜெயலலிதா சொன்னது போல, அவர் சென்ற பிறகும் இன்னும் 100 ஆண்டுகளுக்கு அதிமுக தான் ஆட்சி அரியணையில் இருக்கும்' என்றார் நிறைவாக.