இந்த ஆண்டு மட்டும் இந்திய பாதுகாப்புப் படையின் 9 விமானங்கள் விபத்துக்கு உள்ளாகி இருக்கின்றன
Jorhat: சுமார் ஒரு வாரத்துக்கு முன்னர் 13 பேருடன் அருணாச்சல பிரதேசத்தில் காணாமல் போன ஏ.என் 32 ரக விமானம், அம்மாநிலத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து 8 நாட்கள் தீவிர சோதனைக்குப் பின்னர் இந்திய விமானப் படை, விமானத்தின் சிதிலமடைந்த பாகங்களைக் கண்டுபிடித்துள்ளது. இது குறித்து முதன்முறையாக அருணாச்சல பிரதேச மாநில அரசு சில ஒரு படத்தைப் பகிர்ந்துள்ளது.
அருணாச்சலின், சியாங் மாவட்டத்தின் பாயும் வட்டத்தில் இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது. விமானத்தைத் தேடும் பணியில் ஈடுபட்டிருந்த எம்.ஐ- 17 ரக ஹெலிகாப்ட்டரால் சுமார் 12,000 அடி உயரத்தில் இது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஹெலிகாப்டர், விமானம் இருந்த இடத்தைக் கண்டுபிடித்துவிட்டாலும், அடர்த்தியான வனப் பிரதேசம் இருப்பதனால், சம்பவ இடத்துக்கு அருகே தரையிறங்க முடியவில்லை. ஆனால், சம்பவ இடத்தில் இருந்து சிறிது தூரத்தில் ஹெலிகாப்ட்டர் இறங்குவதற்கான இடம் கண்டுபிடிக்கப்பட்டு விட்டதாகவும், இன்று காலையில் இருந்து மீட்புப் பணி தொடங்கப்பட்டு விட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. தரைப்படையினர் விமானம் விபத்துக்குள்ளான இடத்திற்கு நேற்றிரவே சென்றுவிட்டனராம்.
கடந்த ஜூன் 3 ஆம் தேதி மதியம் 1 மணி அளவில், எட்டு குழு உறுப்பினர்கள் மற்றும் ஐந்து பயணிகள் என மொத்தம் 13 பேருடன், அசாமின் ஜோர்கத் தளத்தில் இருந்து அருணாச்சலின் மெச்சுகா என்ற இடத்துக்கு ஏ.என் 32 விமானம் புறப்பட்டது. ஆனால், ஒரு கட்டத்தில் விமானத்துடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து சி-130 ஜே ரக விமானம், சூகாய் சு-30 போர் விமானம், நேவி பி8-ஐ விமானம், ராணுவ ஹெலிகாப்ட்டர்கள் விமானத்தைக் கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டன. இவைத் தவிர இஸ்ரோ செயற்கைக்கோள்களும் ஆளில்லா ட்ரோன் விமானங்களும் தேடுதல் பணியில் ஈடுபட்டன.
விமானம், தொடர்பில் இருந்து துண்டிக்கப்பட்ட இடமானது மிகவும் அடர்ந்த வனப்பகுதியாகும். இதனால் தேடுதல் பணி மிகவும் சிரமமாக இருந்துள்ளது. மேலும் வானிலையும் தேடுதலுக்கு கை கொடுக்கும் வகையில் அமையவில்லை என்று சொல்லப்படுகிறது.
ரஷ்ய தயாரிப்பான இந்த ஏ.என்.32 ரக விமானம், விமானப்படை வீரர்களை கொண்டு செல்லும் பணிகளுக்கு சுமார் 40 ஆண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு மட்டும் இந்திய பாதுகாப்புப் படையின் 9 விமானங்கள் விபத்துக்கு உள்ளாகி இருக்கின்றன. இதில் ஒரு ஜாகுவார் விமானம், 2 மிக்-27 விமானங்கள், 2 மிக்-21 விமானங்கள், ஒரு மிக்-17 ரக விமானம், ஒரு மிராஜ் 2000 விமானம், ஒரு சூர்யகிரண் ஹாக் எக்ஸ் 2 விமானம் மற்றும் ஒரு ஏ.என்.32 ரக விமானம் அடங்கும்.