This Article is From Sep 25, 2018

அயோத்தி வழக்கில் வெள்ளிக்கிழமை வெளியாகிறது முக்கிய தீர்ப்பு

அயோத்தி வழக்கில் இடம்பெற்றுள்ள பாபர் மசூதியில் தொழுகை நடத்துவதற்கு அனுமதி உண்டா என்பது குறித்து முக்கிய தீர்ப்பு வழங்கப்படவுள்ளது

அயோத்தி வழக்கில் வெள்ளிக்கிழமை வெளியாகிறது முக்கிய தீர்ப்பு

1994-ல் உச்ச நீதிமன்றம் அளித்த உத்தரவில் தொழுகை எங்கு வேண்டுமானாலும் நடத்தலாம் என குறிப்பிடப்பட்டிருந்தது

New Delhi:

நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய அயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்றம் வரும் வெள்ளிக்கிழமையன்று முக்கிய தீர்ப்பினை வழங்கவுள்ளது. வழக்கில் சம்பந்தப்பட்டிருக்கும் பாபர் மசூதியில் தொழுகை நடத்துவதற்கு அனுமதிக்கப்படுமா அல்லது தொழுகையை எங்கு வேண்டுமானாலும் நடத்தலாம் என்பதை சுட்டிக் காட்டி, பாபர் மசூதியில் தொழுவதற்கு தடை விதிக்கப்படுமா என்பது குறித்து முக்கிய உத்தரவு வெள்ளியன்று வெளியாகும்.

தற்போது உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக தீபக் மிஸ்ரா உள்ளார். அவர் தனது பொறுப்பில் இருந்து கடைசியாக அளிக்கும் முக்கிய தீர்ப்பு இதுவாகத்தான் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக கடந்த 1994-ல் அயோத்தி விவகாரம் குறித்து முக்கிய உத்தரவு வெளியானது. அதில் இஸ்லாமியர்கள் தொழுகையை எங்கு வேண்டுமானாலும் நடத்தலாம் என்பதை குறிப்பிட்டு பாபர் மசூதியில் தொழுகை நடத்த தடை விதிக்கப்பட்டது. மேலும் உத்தரப்பிரதேச அரசு விரும்பினால் பாபர் மசூதி இடத்தை கையகப்படுத்திக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இந்த தீர்ப்பு நியாயமானது அல்ல என்று கூறி பல்வேறு முஸ்லிம் அமைப்புகள் சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. கடந்த 2010-ல் அலகாபாத் உயர் நீதிமன்றம் அளித்த உத்தரவில் அயோத்தி நிலத்தை 3 பிரிவுகளாக பிரித்து தீர்ப்பு வழங்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து மற்றும் முஸ்லிம் அமைப்புகள் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளன. இந்த வழக்கில்தான் வரும் வெள்ளியன்று முக்கிய தீர்ப்பு வெளியாகவுள்ளது. 2019 பொதுத் தேர்தலுக்கு முன்பாக அயோத்தி வழக்கில் இறுதிக்கட்ட தீர்ப்பு வெளியாகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

16-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பாபர் மசூதி கடந்த 1992-ல் கர சேவகர்களால் இடிக்கப்பட்டது. அதில் ராமர் கோயிலை கட்ட வேண்டும் என ஒரு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்.
 

.