বাংলায় পড়ুন हिंदी में पढ़ें Read in English
This Article is From Nov 12, 2018

மத்திய அமைச்சர் ஆனந்த் குமார் உயிரிழப்பு!

பாஜக-வின் முக்கிய உறுப்பினரும், மத்திய அமைச்சருமான ஆனந்த் குமார் இன்று காலை பெங்களூருவில் இருக்கும் ஒரு மருத்துவமனையில் உயிரிழந்தார்

Advertisement
இந்தியா

Highlights

  • வாஜ்பாய் தலைமையிலான அமைச்சரவையிலும் ஆனந்த் குமார் பதவி வகித்தார்
  • ஐநா-வில் பேசிய முதல் கன்னடர் என்ற பெருமையைப் பெற்றவர் ஆனந்த் குமார்
  • 1998-ல் வாஜ்பாய் அமைச்சரவையில் இவர் தான் இள வயது அமைச்சர் ஆவார்
Bengaluru:

பாஜக-வின் முக்கிய உறுப்பினரும், மத்திய அமைச்சருமான ஆனந்த் குமார் இன்று காலை பெங்களூருவில் இருக்கும் ஒரு மருத்துவமனையில் உயிரிழந்தார். புற்று நோயால் அவதிப்பட்டு வந்த ஆனந்த் குமார், அமெரிக்காவில் சிகிச்சை எடுத்துவிட்டு சமீபத்தில் தான் நாடு திரும்பினார். பெங்களூருவில் இருக்கும் தேசிய கல்லூரி மைதானத்தில் அவரது உடல் இன்று அஞ்சலிக்காக வைக்கப்படும். 

 

தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் 1998 ஆம் ஆண்டு, அடல் பிகாரி வாஜ்பாய் தலைமையில் மத்தியில் ஆட்சி அமைந்த போதும், ஆனந்த் குமார் அமைச்சரவையில் இடம் பெற்றார். அப்போது, அவர் தான் இளம் அமைச்சராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் விமானப் போக்குவரத்துத் துறை, சுற்றுலா துறை, விளையாட்டுத் துறை, நகர்ப்புற வளர்ச்சித் துறை ஆகியவற்றுக்கு அமைச்சராக இருந்தார். 

ஐநா சபையில் முதன் முறையாக கன்னடத்தில் பேசியவர் என்ற பெருமைக்கும் உரியவர் ஆனந்த் குமார். 

Advertisement

‘எனது நண்பரும் சகாவுமான ஆனந்த் குமார் இறந்தது குறித்து மிகவும் வருத்தமடைகிறேன். மிகவும் அசாத்திய தலைமை பண்பு கொண்ட அவர், மிக இள வயதில் பொது வாழ்க்கையில் நுழைந்தார். சமூகத்துக்காக அயராது உழைத்தவர் ஆனந்த் குமார். அவரின் பணிக்காக என்றும் நினைவுகூறப்படுவார்' என்று பிரதமர் நரேந்திர மோடி உருக்கமாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். 

கர்நாடக முதல்வர் குமாரசாமி, ‘அரசியலையும் தாண்டி ஆனந்த் குமாருடன் எனக்கு நல்ல நட்பு இருந்தது. நட்புக்கு அவர் மிகவும் முக்கியத்துவம் கொடுத்தார். ஒரு நண்பனை நான் இன்று இழந்துவிட்டேன்' என்று உருகியுள்ளார்.

Advertisement

இன்று கர்நாடகாவில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வரும் 14 ஆம் தேதி வரை அரசு துக்கம் அனுஷ்டிக்கும் என்று தெரிவித்துள்ளது. 

Advertisement