அன்புமணி ராமதாஸ், ‘அரசு ஊழியர்கள் போராட்டத்துக்குப் பாமக முழு ஆதரவு கொடுக்கிறது’ என்று கூறியுள்ளார்.
ஹைலைட்ஸ்
- 22-ம் தேதி முதல் ஸ்டிரைக் நடந்து வருகிறது
- நீதிமன்றம், ஊழியர்கள் வேலைக்குத் திரும்புமாறு கூறியுள்ளது
- அரசு தரப்பும், 'ஊழியர்களுக்கு சம்பளம் தரப்படாது' என்று எச்சரித்துள்ளது
சென்னை உயர் நீதிமன்றம், வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர்களை கட்டாயமாக பணிக்குத் திரும்புமாறு இன்று உத்தரவிட்டுள்ளது. அப்படி இருந்தும் நாளையும் வேலை நிறுத்தம் தொடரும் என்று ஜாக்டோ ஜியோ சங்கம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இந்நிலையில் பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ், ‘அரசு ஊழியர்கள் போராட்டத்துக்குப் பாமக முழு ஆதரவு கொடுக்கிறது' என்று கூறியுள்ளார்.
முன்னர் அமலில் இருந்த பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தக் கோரி தமிழக அரசு பள்ளி ஆசிரயர்கள் மற்றும் ஊழியர்கள் கடந்த 22 ஆம் தேதி முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அரசு தரப்பில் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடந்து வந்தாலும் அனைத்தும் தோல்வியில்தான் முடிந்துள்ளது.
இதற்கிடையில் தமிழக தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், ‘வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள அனைத்து ஊழியர்களும் உடனடியாக பணிக்குத் திரும்ப வேண்டும். பணிக்கு வராதவர்களுக்கு ஊதியம் கொடுக்கப்படாது' என்று எச்சரிக்கை விடுத்து அறிக்கை வெளியிட்டார்.
இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்த வந்த வழக்கிலும் , ‘அரசு ஊழியர்கள் காலம் தாழ்த்தாமல் உடனடியாக வேலைக்குத் திரும்ப வேண்டும்' என்று உத்தரவிட்டுள்ளது நீதிமன்றம்.
இப்படி அடுத்தடுத்து எச்சரிக்கைகள் வந்த போதும், திட்டமிட்டப்படி நாளையும் ஸ்டிரைக் தொடரும் என்று தெரிவித்துள்ளனர் ஜாக்டோ-ஜியோ சங்கத்தினர். அரசு கோரிக்கைகளுக்கு செவி மடுக்காத வரையில் போராட்டம் தொடரும் என்று அவர்கள் உறுதியாக கூறியுள்ளனர்.
இது குறித்து சேலத்தில் செய்தியாளர்கள் மத்தியில் பேசிய அன்புமணி, ‘அரசு ஊழியர்களின் கோரிக்கைக் நியாயமானது. நீண்ட நாட்களாக நிலுவையில் இருக்கும் கோரிக்கைகள் அவை. அதை நிறைவேற்றாமல் இருக்க அரசு தரப்பு சொல்லும் காரணம், நிதி. உண்மையில் அந்த கோரிக்கைகளை நிறைவேற்ற அதிக நிதி தேவைப்படாது. உடனடியாக அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும்' என்று கருத்து தெரிவித்துள்ளார்.