பல்வேறு தரப்பினரும் அதிமுக-பாமக கூட்டணியை விமர்சித்து வரும் நிலையில் இன்று சென்னை, தியாகராய நகரில் செய்தியாளர்களை சந்தித்தார் பாமக-வின் இளைஞரணிச் செயலாளர் அன்புமணி ராமதாஸ்.
மக்களவைத் தேர்தலுக்கான கூட்டணி காய் நகர்த்தல்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. கொள்கை, கோட்பாடெல்லாம் தள்ளி வைத்துவிட்டு, வெற்றி ஒன்றே நோக்கம் என கட்சிகள் அணி சேர்ந்து வருகின்றன. அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக, பாமக இணைந்துவிட்டன. பாமக-வுக்கு மக்களைவைத் தேர்தலில் 7 தொகுதிகளை ஒதுக்கியுள்ளது அதிமுக.
கடந்த காலங்களில் அதிமுக-வை கடுமையாக விமர்சித்தது பாமக. ஆனால், தேர்தலுக்காக இன்று இரு கட்சிகளும் ஓரணியில் இணைந்துள்ளன. பல்வேறு தரப்பினரும் இந்தக் கூட்டணியை விமர்சித்து வரும் நிலையில் இன்று சென்னை, தியாகராய நகரில் செய்தியாளர்களை சந்தித்தார் பாமக-வின் இளைஞரணிச் செயலாளர் அன்புமணி ராமதாஸ்.
அதிமுக-வை பாமக வெறுமனே விமர்சனம் மட்டும் செய்யவில்லை, ஆளுநரிடம் அதிமுக அரசு மீது அதாரபூர்வமாக ஊழல் புகார் கொடுத்தீர்கள். இப்போது என்ன ஆச்சு?
இப்போதும் எங்கள் நிலைப்பாடு அதேதான். யார் ஊழல் செய்திருந்தாலும் அவர் தண்டிக்கப்பட வேண்டும் என்றுதான் சொல்லி வருகிறோம்.
இடைத் தேர்தல் போட்டியில்லை என்றீர்கள். இப்போது ஏன் அதிமுக-வுக்கு ஆதரவு?
இப்போதும் நாங்கள் இடைத் தேர்தலில் போட்டியில்லை என்றுதான் சொல்கிறோம். கூட்டணிக்காக ஆதரவு மட்டும்தான். பென்னகரம் இடைத் தேர்தலுக்குப் பிறகு நாங்கள், இனி இடைத் தேர்தல்களில் பட்டியிடப் போவதில்லை என்றோம். இப்போதும் அந்த நிலைப்பாட்டில்தான் இருக்கிறோம்.
சில காலங்களுக்கு முன்னர் ராமதாஸ், ‘திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி வைப்பது என்பது பெற்றத் தாயுடன் உறவு வைப்பது போல' என்றார். இப்போது மறுபடியும் கூட்டணி வைத்துள்ளார். இது உங்களுக்கு நெருடலாக இல்லையா?
கண்டிப்பாக இல்லை. காரணம், எங்கள் கட்சியும் மக்களும் கூட்டணியை ஏற்றுக் கொண்டனர். நீங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்றால் எங்களுக்குக் கவலை இல்லை.
குட்கா வழக்கில் விஜயபாஸ்கரை கடுமையாக எதிர்த்தீர்கள். அவர் அமைச்சரவையில் இருக்கக் கூடாது என்றீர்கள். ஆனால், இப்போது அவருடன் நட்புறவுடன் இருக்கிறீர்கள். அதிமுக ஊழல் கட்சியா இல்லையா?
இப்போதும் அந்த ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றுதான் சொல்கிறோம்.
ஸ்டாலின், உங்கள் கூட்டணியைப் ‘பண நலக் கூட்டணி' என்றுள்ளார். திமுக-வுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதா?
தமிழகத்தில் இருக்கும் பிரதானக் கட்சிகள் எங்களை அணுகின. திமுக-வுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது உண்மைதான். ஐயா, கட்சித் தொண்டர்கள், நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்தார். அதன் பின்னர்தான் அதிமுக-வுடன் சேர வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டது. ஸ்டாலினுடன் நாங்கள் செல்லவில்லை என்ற காரணத்தால் எங்களை அவர் கடுமையாக விமர்சிக்கிறார் போல.
அதிமுக-வை நீங்கள் கடுமையாக விமர்சித்த வீடியோக்கள் வைரலாக போகிறதே. அது குறித்து?
அது திமுக அணி, வெளியிட்ட வீடியோக்கள். இன்னொன்று இது அரசியலில் சாதரணம்தான். திமுக கூடத்தான், ‘அடைந்தால் திராவிட நாடு, இல்லையென்றால் சுடுகாடு' என்றார்கள். அந்த நிலைப்பாட்டுக்கு என்ன ஆயிற்று. கடந்த 5 தேர்தல்களாக நாங்கள் தனித்து நின்று கடுமையாக தோல்வி கண்டோம். மக்கள் எங்களை ஏற்றுக் கொள்ளவில்லை. அதனால், இந்தத் தேர்தலுக்கு நாங்கள் கூட்டணி வியூகம் அமைத்துள்ளோம். அடுத்த தேர்தலுக்கு வியூகம் வேறாக இருக்கும்.
எழுவர் விடுதலை குறித்து, நீட் தேர்வு குறித்தெல்லாம் நீங்கள் பாஜக-வுடன் பேசி ஏன் ஒரு உடன்படிக்கையை வாங்கவில்லை?
இன்னும் நாங்கள் பாஜக-வுடன் பேசவில்லை. அவர்களுடன் நாங்கள் பேச அனுமதிக்கப்படும்போது, இந்த கோரிக்கைகள் உட்பட காவேரி விஷயம், டெல்டா விஷயம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து பாஜக-விடம் பேசுவோம். பல திட்டங்களை ரத்து செய்ய அதிமுக-வுடன் இணைந்து நாங்கள் சட்ட ரீதியிலாக அழுத்தம் கொடுப்போம். பொறுத்திருந்து பாருங்கள்.
நாடாளுமன்றத்தில் மிகவும் குறைவான அமர்வுகளில் கலந்து கொண்ட தமிழக எம்.பி., நீங்கள்தான். தர்மபுரி மக்களுக்கு நீங்கள் என்ன சொல்ல இருக்கிறீர்கள்?
கடந்த 5 ஆண்டுகளில் தர்மபுரியில் மட்டும்தான் புதிய ரயில் வழித் திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தர்மபுரியில் இருந்த தண்ணீர் பிரச்னை தீர்க்கப்பட்டுள்ளது. அங்கு பல்வேறு திட்டங்களை நான் அறிவித்துள்ளேன்.
அதிமுக ஊழல் கட்சியா இல்லையா?
நல்ல கேள்வி. இது குறித்து நாங்கள் முன்னர் நிறைய கருத்து கூறியுள்ளோம். ஆளுநரிடம் நாங்கள் புகார் கொடுத்துள்ளோம். ஊழல் குறித்து குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் இது குறித்து பேசலாம்.
செய்தியாளர்கள் சந்திப்பில் பல சமயம் நெருக்கடியான கேள்வி கேட்டபோது, அன்புமணி, ‘நாங்கதான் மக்களை சந்திக்க வேண்டும். நீங்கள் ஏன் டென்ஷன் ஆகிறீர்கள். நாங்கள்தான் தேர்தலை சந்திக்க உள்ளோம். நீங்கள் தண்ணீர் குடிங்கள். ஜாலியாக இருங்கள். ஊடகங்கள் இவ்வளவு கட்டுப்பாடு இல்லாமல் இருக்கிறதே' என்று கல்தா கொடுத்தார்.
மேலும் படிக்க - எதிரிகளை ஓட ஓட விரட்டி அடிக்கும் தேர்தலாக மக்களவை தேர்தல் அமைய வேண்டும் - எடப்பாடி பேச்சு