Anbumani Ramadoss - "நீங்கள் தேர்ந்தெடுக்கும் இளைஞருக்கு நம் கட்சி பற்றி, நம் கொள்கைகள் பற்றி, நம் கோட்பாடு பற்றி, அய்யாவைப் பற்றி தெரிந்திருக்க வேண்டும்"
தமிழகத்தில் அடுத்ததாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பாமக-வின் இளைஞரணிச் செயலாளர் அன்புமணி ராமதாஸ், தனது கட்சி நிர்வாகிகளுகளுக்கு இலக்கு நிர்ணயித்து அதிரடி காட்டியுள்ளார்.
பாமக-வின் இளைஞரணி நிர்வாகிகளை, பொதுக் கூட்ட நிகழ்ச்சி ஒன்றில் சந்தித்து உரையாற்றிய அன்புமணி, “இங்கு நான் அதிகம் பேசப் போவதில்லை. உங்களுக்கெள்ளால் ஒரேயொரு இலக்கு வைக்கப் போகிறேன். அந்த இலக்கை நீங்கள் 10 நாட்களில் அடைந்துவிட வேண்டும். நகர, பேரூர், ஒன்றியச் செயலாளர்களுக்கு இது முக்கியமான பணியாக இருக்கும். உங்கள் ஒன்றியத்தில் அல்லது பகுதியில் எத்தனை வாக்குச் சாவடி இருக்கின்றன என்கின்ற கணக்கை எடுங்கள். ஒவ்வொரு வாக்குச் சாவடிக்கும், உணர்வுமிக்க உண்மையான இளைஞர் ஒருவரைத் தேர்ந்தெடுங்கள்.
நீங்கள் தேர்ந்தெடுக்கும் இளைஞருக்கு நம் கட்சி பற்றி, நம் கொள்கைகள் பற்றி, நம் கோட்பாடு பற்றி, அய்யாவைப் பற்றி தெரிந்திருக்க வேண்டும். உணர்வுமிக்க அதே நேரத்தில் மிகவும் உண்மையான இளைஞராக அவர் இருக்க வேண்டும். விவரம் தெரிந்தவராக, விலை போகாதவராக அவர் இருக்கிறாரா என்பதை உறுதி செய்யுங்கள். அப்படி தேர்வு செய்யும் இளைஞர்களின் விவரங்களை மாவட்ட நிர்வாகிகள் மூலம் என்னிடம் சமர்ப்பிக்க வேண்டும். இந்தப் பணியைச் செய்து முடிக்க உங்களுக்கு 10 நாட்கள்தான் அவகாசம். நீங்கள் பூத் ஒன்றுக்கு ஒரு இளைஞரைத் தேர்வு செய்த பின்னர் நான் அவர்களை நேரடியாக வந்து சந்திப்பேன்.
தமிழக அளவில் அடுத்தக்கட்டப் பணிகளை அவர்களை வைத்துத்தான் நாம் செய்யப் போகிறோம். எனவே, எப்படிப்பட்ட இளைஞர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள் என்பதில் நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இந்த இலக்கை முடித்துக் காட்டுங்கள். அது மட்டும்தான் உங்களுக்கு நான் இடும் ஒரே கட்டளையாக இருக்கும்,” என்றார்.