அரசுக்கு எதிராக கருத்து: மருத்துவர் மீது போலீசார் சரமாரி தாக்குதல்! ஆந்திராவில் பரபரப்பு
Visakhapatnam: ஆந்திராவில் அரசுக்கு எதிராக கருத்து தெரிவித்த மருத்துவர் மீது போலீசார் சரமாரி தாக்குதல் நடத்தியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக வெளியாகியுள்ள வீடியோவில், சாலையில் கைகள் கட்டப்பட்ட நிலையில் மேல்சட்டையில்லாமல் காணப்பட்டவர் நரசிப்பட்டினத்தை சேர்ந்த மருத்துவர் சுதாகர் என்று தெரியவந்துள்ளது. தொடர்ந்து, அவரை காவலர்கள் ஆட்டோவில் ஏற்றிச்சென்றனர். எனினும், அந்த மருத்துவர் மீது எதற்காக பல வழக்குகள் பதியப்பட்டுள்ளன என்பது குறித்த தகவல்கள் தெரியவில்லை.
கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கான பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்களுக்கு போதிய அளவில் என்95 முகக்கவசங்கள் வழங்கப்படவில்லை என்றும், மருத்துவர்கள் ஒரே முகக்கவசத்தை 15 நாட்கள் வரை பயன்படுத்த வேண்டிய நிலை உள்ளதாகவும், மருத்துவர் சுதாகர் மாநில அரசை கடுமையாக குற்றம்சாட்டியிருந்த நிலையில் கடந்த ஏப்.8ம் தேதி அரசு குறித்து பொய்யான தகவல்களை பரப்புவதாக அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
இந்நிலையில், சனிக்கிழமையன்று நடந்த சம்பவம் குறித்த பல வீடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோக்களில் சிலவற்றை காவல்துறையினரே எடுத்துள்ளனர் என்பதும் தெரியவந்துள்ளது. அதில், மருத்துவர் சுதாகர் பிங்க் நிற சட்டை, முகக்கவசம் அணிந்தபடி தனது காருக்குள் இருந்து காவலர்களை நோக்கி கூச்சலிடுகிறார்.
தொடர்ந்து, அடுத்தடுத்த வீடியோக்களில் காரில் இருந்த உணவுகள் உள்ளிட்ட பொருட்களை அவர் தூக்கி வீசுகிறார். காவலர்களை கடுமையான வார்த்தைகளில் விமர்சிக்கிறார், தைரியம் இருந்தால் தன்னை தாக்குங்கள் என்றும் கூறுகிறார்.
ஒரு வீடியோவில் போலீசார் ஒருவரின் மொபைல் போனை, மருத்துவர் தூக்கி வீசியதாகவும் அதனால், உடைந்துபோன அந்த போனையும் அந்த போலீசார் வீடியோவில் காண்பிக்கிறார். தொடர்ந்து, மருத்துவர் சுதாகர் மேல்சட்டையில்லாமல் காவலர்களை எச்சரிக்கிறார்.
எதற்காக சுதாகர் தனது மேல்சட்டையை கழட்டினார் என்பதும் தெளிவாக தெரியவில்லை.
மற்றொரு வீடியோவில் மருத்துவர் சுதாகரை அங்கிருந்த போலீசார் கடுமையாக திட்டுகின்றனர். அவரது காரை கைக்காட்டி உள்ளே செல்லுமாறு அவர்கள் கூறுகின்றனர்.
தொடர்ந்து, இன்னொரு வீடியோவில், ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி குறித்து அவர் இனவாத கருத்துகளை வெளிப்படுத்துகிறார். தொடர்ந்து, அவரை தரக்குறைவாக விமர்சிக்கிறார். முதல்வர் இந்துக்களுக்கு எதிராக செயல்படுவதாகவும், அவருக்கு காவலர்கள் மற்றும் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் ஆதரவாக இருப்பதாகவும் விமர்சிக்கிறார்.
இந்த சம்பவத்தை பார்க்க அங்கு மக்கள் கூட்டம் கூடியதையடுத்து, போலீசார் கூட்டத்தை அப்புறப்படுத்துகின்றனர். தொடர்ந்து, மருத்துவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும், குடித்திருப்பதாகவும் போலீசார் அந்த வீடியோவில் குற்றம்சாட்டுகின்றனர்.
இதுதொடர்பாக மருத்துவர் ஸ்ரீதேவி கூறும்போது, மருத்துவர் சுதாகருக்கு மனநிலை பாதிக்கப்பட்டிருக்கலாம் என்றும், சுதாகர் மனநிலையை மதிப்பிடுவதற்காக மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்படுவார் என்றும் அவர் கூறினார்.
இதுதொடர்பாக மருத்துவர் சுதாகர் கூறும்போது, அனகாப்பள்ளி நோக்கி சென்றுகொண்டிருந்தபோது, போலீசார் எனது காரை மறித்து சோதனையில் ஈடுபட்டனர். அப்போது எதற்காக இவ்வளவு பணத்தை எடுத்துச்செல்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பினர். எனது கடனை திரும்பி செலுத்துவதற்காக எடுத்துச்செல்வதற்காக நான் கூறியும் அவர்கள் பணத்தை பறிமுதல் செய்துவிட்டு காரில் இரண்டு பாட்டில்களை வைத்தனர். தொடர்ந்து, என்னை சரமாறியாக தாக்கிவிட்டு, என் மீது தீவிரவாத வழக்கு பதிவு செய்துவிடுவோம் என்றும் மிரட்டியதாக அவர் கூறினார்.
இதனிடையே, விசாகப்பட்டினம் காவல் ஆணையர் ஆர்.கே மீனா, மருத்துவரை தாக்கியதாக காவலர் ஒருவரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.