Amaravati: தெலங்கானாவில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில், ஆளுங்கட்சியாக இருந்த தெலங்கானா ராஷ்டிர சமிதி, மாபெரும் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அரியணையில் அமர உள்ளது.
ஆட்சிக்கு வந்த பின்னர் சந்திரசேகர் ராவ், ‘என் நண்பரும் ஆந்திர முதல்வருமான சந்திரபாபு நாயுடு, தெலங்கானா தேர்தலில் தன் கட்சி வெற்றி பெற வேண்டுமென்று கடுமையாக உழைத்தார். நானும் அதைப் போன்று உழைக்க வேண்டாமா…
விரைவில் நான் ஆந்திராவுக்குச் சென்று, நாயுடுவின் உண்மையான முகத்தை மக்களுக்கு எடுத்துக் காட்டுவேன். எனக்கு சந்திரபாபு நாயுடு ஒரு பரிசைக் கொடுத்தார். நானும் அவருக்கு பதிலுக்குப் பரிசைத் தர வேண்டாமா. அப்படித் தரவில்லை என்றால் நான் பண்பாடற்றவன் என்று பேச்சுக்கு ஆளாக மாட்டேனா?' என்று கேலி செய்யும் விதத்தில் பேசினார்.
ராவின் கருத்துக்கு நாயுடு, ‘ஜனநாயக நாட்டில் யார் வேண்டாமானாலும், விரும்பிய இடத்துக்குச் சென்று பணி செய்யலாம். கேசிஆர், ஆந்திராவுக்கு வந்து பரிசைத் திருப்பிக் கொடுப்பது குறித்து பேசுகிறார். அவர் தாராளமாக வரலாம்.
தெலுங்கு தேசம் கட்சி என்பது தெலுங்கு பேசும் மக்களின் நலனை பூர்த்தி செய்வதற்காக உருவாக்கப்பட்டது. என்னவானாலும், தெலுங்கு மக்களுக்கு இந்தக் கட்சி நன்மை செய்யும்' என்று பதிலடி கொடுத்தார்.
தெலங்கானா தேர்தலில், டிஆர்எஸுக்கு எதிராக காங்கிரஸுடன் கை கோர்த்து களமிறங்கினார் சந்திபாபு நாயுடு. இந்தக் கூட்டணி, கேசிஆர் கட்சிக்கு அதிக நெருக்கடி கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தேர்தலில் கேசிஆரின் கட்சி மிகப் பெரும் வெற்றியைத் தெலங்கானாவில் பெற்றது.