ஆந்திர முதல்வர் சந்திபாபு நாயுடு, ஆந்திர பிரதேச மக்களுக்கு சர்ச்சைக்குரிய வகையில் அட்வைஸ் ஒன்றை கொடுத்துள்ளார்
Amaravati: ஆந்திர முதல்வர் சந்திபாபு நாயுடு, ஆந்திர பிரதேச மக்களுக்கு சர்ச்சைக்குரிய வகையில் அட்வைஸ் ஒன்றை கொடுத்துள்ளார்.
அமராவதியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நாயுடு, “இந்தியாவில் மிகச் சிறப்பான ஒன்று இங்கு இருக்கும் குடும்ப முறை. மனிதவளம் என்பது மிக முக்கியமானது. அதனால், நீங்கள் குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று சொல்கிறேன். ஒரேயொரு குழந்தையாவது நீங்கள் பெற்றுக் கொண்டு மனித வளத்தை வளர்க்க வேண்டும் என்கிறேன். அது குறித்து விழிப்புணர்வு எற்படுத்த வேண்டும்” என்று பேசியுள்ளார்.
ஒரு காலத்தில் குடும்ப கட்டுப்பாடு முறையை மிகத் திறமையுடன் அமல்படுத்திய மாநிலங்களில் ஒன்று ஆந்திரா. ஆனால், அதன் இன்னாள் முதல்வர் அதற்கு எதிராக அட்வைஸ் கொடுத்துள்ளது பலத்த சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
அவர் மேலும் பேசுகையில், “தற்போது இருக்கும் இளைஞர்கள் திருமணம் செய்து கொள்ளவோ, குழந்தை பெற்றுக் கொள்ளவோ விருப்பப்படுவதில்லை. அது என்னை கவலை கொள்ளச் செய்கிறது. அது பேரழிவுக்கு இட்டுச் செல்லும். சீனா, ஜப்பான் மற்றும் ஐரோப்பிய நாடுகள் மக்கள் தொகை பெருக்கமின்மையால் மிகவும் சிரமப்பட்டு வருகின்றன.
தற்போது இந்தியா, ஜனத் தொகையில் ஒரு நல்ல இடத்தில் உள்ளது. ஆனால், எதிர்காலத்தில் இது பிரச்னைக்கு உள்ளாகலாம். இப்போதே, பிறப்பு சதவிகிதத்தைவிட இறப்பு சதவிகிதம் அதிகமாக இருக்கிறது.
முன்னரெல்லாம் 2 குழந்தைகளுக்கு மேல் ஒருவருக்கு இருந்தால், பஞ்சாயத்து தேர்தல்களில் அவர் நிற்கக் கூடாது என்ற விதி இருந்தது. ஆனால், அந்த விதியை நாங்கள் தளர்த்த உள்ளோம். 4 குழந்தைகள் வரைப் பெற்றாலும் போட்டியிடத் தடை இல்லாதபடி விதி வகுக்கப்படும்” என்றார்.