This Article is From Apr 02, 2020

குதிரையில் கொரோனா படம்!! அச்சுறுத்தும் ஆந்திர போலீஸ்!

வெள்ளைக் குதிரையில் கொரோனா வைரஸின் படத்தை சிவப்பு வண்ணத்தில் வரைந்து ஆந்திர போலீசார் பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.

குதிரையில் கொரோனா படம்!! அச்சுறுத்தும் ஆந்திர போலீஸ்!

சப் இன்ஸ்பெக்டர் மாருதி சங்கர் குதிரையில் செல்லும் காட்சி.

ஹைலைட்ஸ்

  • ஊரடங்கை பராமரிக்கும் பணியில் காவலர்கள் ஈடுபட்டுள்ளனர்
  • வெளியே சுற்றுவோர் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கின்றனர்
  • குதிரையில் கொரோனா படம் வரைந்து போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்

வெள்ளைக் குதிரையில் கொரோனா படத்தை வரைந்து ஆந்திர போலீசார் பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். இந்த வெள்ளை குதிரைகள் இணையத்தில் வைரலாகியுள்ளன.

நாட்டில் கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டுவர 21 நாட்கள் ஊரடங்கு போடப்பட்டுள்ளது. மக்கள் அத்தியாவசிய தேவைக்கு மட்டுமே வெளியே வர வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இருப்பினும், தேவையின்றி சிலர் வெளியே நடமாடுகின்றனர்.

இதனால் அவர்கள் மட்டுமின்றி, அவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டால் அவரைச் சுற்றியுள்ளவர்கள் அனைவரும் பாதிக்கப்படுவார்கள்.

ஊரடங்கை மீறி வெளியே வருவோரை சில இடங்களில் போலீசார், காலில் விழாத குறையாக கெஞ்சி திருப்பி அனுப்புகின்றனர். சில இடங்களில், லத்தியால் ஓட ஓட விரட்டி போலீசார் ஊரடங்கை நிலை நாட்டுகின்றனர்.

இந்த நிலையில் மக்களிடம் கொரோனா குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக, ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம் பையாபிளியில், சப் இன்ஸ்பெக்டர் மாருதி சங்கர் நூதன முயற்சியை செய்துள்ளார். வெள்ளை குதிரை ஒன்றில் சிவப்பு வண்ணத்தில் கொரோன வைரஸின் படங்களை அவர் வரைந்துள்ளார். இதன்மேல் ஏறிச் சென்றவாறு, மாருதி மக்களிடம் விழிப்புணர்வு செய்கிறார். இந்த கொரோனா குதிரை இணையத்தில் வைராகி வருகிறது.

.

சமீபத்தில் சென்னையில் கொரோனா மாடல் ஹெல்மெட்டை அணிந்தவாறு, தமிழக போலீசார் விழிப்புணர்வு செய்தனர். இது உலகம் முழுவதும் வைரலானது.

இதுகுறித்து, அந்த ஹெல்மெட்டை டிசைன் செய்த கவுதம் என்பவர் கூறுகையில், ‘மக்கள் அதிக எண்ணிக்கையில் கூடுகிறார்கள். கொரோனா குறித்த அச்சம் அவர்களிடத்தில் இல்லை. போலீசார் 24 மணிநேரமும் பணியாற்றுகின்றனர். மக்கள் வீட்டில் இருந்தால்தான் கொரோனாவில் இருந்து தப்ப முடியும்.

உடைந்த ஹெல்மெட்டுகளையும், பேப்பர்களையும் பயன்படுத்தி நான் கொரோனா ஹெல்மெட்டை வடிவமைத்தேன். இதேபோன்று இன்னும் சில விழிப்புணர்வு பொருட்களையும் உருவாக்கி போலீசாரிடம் நான் அளித்துள்ளேன்' என்றார்.

.