மேற்கு வந்த முதல்வர் மம்தா பானர்ஜி, ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், தமிழக எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோரை தொடர்ந்து சந்தித்து மூன்றாவது அணிக்காக ஆதரவு சேர்த்து வருகிறார் கேசிஆர்
ஹைலைட்ஸ்
- கேசிஆர் தெலங்கானாவில் 2வது முறையாக ஆட்சியமைத்துள்ளார்
- அவர் '3வது அணிக்கு' குரல் கொடுத்து வருகிறார்
- '3வது அணிக்கு' தொடர்ந்து ஆதரவு சேர்த்து வருகிறார் கேசிஆர்
Hyderabad: ஆந்திர பிரதேச எதிர்கட்சித் தலைவரும், ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ஜெகன் மோகன் ரெட்டியை, தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவின் மகன் ராமா ராவ் இன்று சந்தித்துள்ளார். நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி குறித்து இந்த சந்திப்பில் பேசப்படும் என்று தகவல் தெரிவிக்கப்படுகிறது.
சமீபத்தில் நடந்து முடிந்த தெலங்கானா சட்டமன்றத் தேர்தலில் சந்திரசேகர் ராவின் தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சி பெரும்பான்மை பெற்று இரண்டாவது முறையாக ஆட்சி அமைத்தது. ஆட்சி அரியணையில் ஏறியதிலிருந்து கேசிஆர், ‘பாஜக, காங்கிரஸ் அல்லாத மூன்றாவது அணி மத்தியில் ஆட்சியமைக்க வேண்டும்” என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். வெறுமனே வாய் வார்த்தையாக மட்டும் சொல்லாமல் மேற்கு வந்த முதல்வர் மம்தா பானர்ஜி, ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், தமிழக எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோரை அவர் தொடர்ந்து சந்தித்து மூன்றாவது அணிக்காக ஆதரவு சேர்த்து வருகிறார்.
கடந்த சனிக்கிழமைதான் உத்தர பிரதேசத்தில் அகிலேஷ் யாதவ் - மாயாவதி வரும் நாடாளுமன்றத் தேர்தில் கூட்டணி அமைத்துப் போட்டியிடுவது குறித்து அதிகாரபூர்வமாக அறிவித்தனர். இருவரும் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியில் இடம் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தனியாக கூட்டணி அறிவிப்பை வெளியிட்டனர்.
இந்நிலையில் ஆந்திர எதிர்கட்சித் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டியை சந்தித்து, தனது ‘3வது அணி' கோரிக்கைக்கு ஆதரவு சேகரிக்க உள்ளார் கேசிஆர்-ன் மகன் ராமா ராவ். ஜெகன் மற்றும் சந்திரசேகர் ராவ் ஆகிய இருவருக்கும் பொது எதிரியாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு இருந்து வருகிறார். அவரை வீழ்த்தவும் இந்த சந்திப்பின் போது வியூகம் வகுக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. நாயுடு, காங்கிரஸுடனான கூட்டணியில் இருக்கிறார்.
கேசிஆர் மகன் உடனான சந்திப்பு குறித்து ஜெகன் மோகன் ரெட்டியிடம் NDTV சார்பில் தொடர்பு கொண்டு கேட்டபோது, “சந்திரசேகர் ராவையும் அவரது கட்சியையும் நாங்கள் நல்ல தோழமையுடன்தான் அணுகுகிறோம்” என்று மட்டும் கருத்து கூறினார். இரு தலைவர்களின் சந்திப்பும் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் எதிரொலிக்கும் என்றே கூறப்படுகிறது.