"ஏன்ஆர்சி-ஐ நாங்கள் எதிர்க்கிறோம். ஆந்திர பிரதேசத்தில் அதை அமல் செய்ய அனுமதிக்க மாட்டோம்," Jagan Reddy
Hyderabad: குடியுரிமை திருத்தச் சட்டத்தை மத்திய அரசு அமல் செய்திருந்தாலும், அதை ஏற்க முடியாது என்று பல்வேறு மாநில முதல்வர்களும் அதிரடியாக கருத்து கூறி வருகின்றனர். இந்நிலையில் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியும் (Jagan Mohan Reddy) குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கும் தேசிய மக்கள் பதிவேடான என்ஆர்சிக்கும் (NRC) ‘நோ' சொல்லியிருக்கிறார். நாடாளுமன்றத்தில் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி, குடியுரிமைச் சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
“என்ஆர்சி குறித்து விளக்கம் கொடுக்க வேண்டும் என்று சிறுபான்மையினச் சகோதரர்கள் கேட்டுக் கொண்டனர். ஏன்ஆர்சி-ஐ நாங்கள் எதிர்க்கிறோம். ஆந்திர பிரதேசத்தில் அதை அமல் செய்ய அனுமதிக்க மாட்டோம்,” என்று விளக்கம் கொடுத்துள்ளார்.
ஜெகன் மோகன் ரெட்டி, இப்படி வெளிப்படையாக குடியுரிமைச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளதால், தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவுக்கு அழுத்தம் அதிகரித்துள்ளது.
அவர் குடியுரிமைச் சட்டம் மட்டும் என்ஆர்சி குறித்து முன்னர் பேசுகையில், “எது குறித்தும் இப்போது கவலைப்படத் தேவையில்லை. இந்த நாட்டின் உண்மையான குடிமக்களை அரசு பாதுகாக்கும். இந்த விவகாரம் குறித்தான ஆணை வரட்டும். பின்னர் பார்த்துக் கொள்ளலாம்,” என்று மழுப்பலாக பதில் அளித்திருந்தார்.
நாட்டில் உள்ள பல மாநில முதல்வர்கள் ஏன்ஆர்சி-ஐ தங்கள் மாநிலத்தில் அமல் செய்ய முடியாது என்று திட்டவட்டமாக கூறியுள்ளனர். மம்தா பானர்ஜி (மேற்கு வங்கம்), நிதிஷ் குமார் (பிகார்), நவீன் பட்நாயக் (ஒடிசா), அமரீந்தர் சிங் (பஞ்சாப்), கமல்நாத் (மத்திய பிரதேசம்), அசோக் கெலோட் (ராஜஸ்தான்) மற்றும் பினராயி விஜயன் (கேரளா) ஆகியோர் என்ஆர்சி-க்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.