போலீஸ் துன்புறுத்தல் பற்றி அவர் தன் அறிக்கையில் எதையும் குறிப்பிடவில்லை முதல்வர் பழனிசாமி.
ஹைலைட்ஸ்
- கடந்த வெள்ளிக்கிழமை ஜெயராஜ், பென்னிஸை கைது செய்துள்ளது போலீஸ்
- தந்தை, மகன் சாத்தான்குளத்தில் மொபைல் கடை வைத்துள்ளனர்
- போலீஸ் துன்புறுத்தலில் இருவரும் இறந்ததாக குற்றச்சாட்டு
Chennai: கடந்த வெள்ளிக்கிழமை தூத்துக்குடியின் சாத்தான்குளம் பகுதியைச் சேர்ந்த ஜெயராஜும் அவரது மகன் பென்னிஸும், முழு முடக்கத்தின் போது அனுமதிக்கப்பட்ட நேரத்தையும் தாண்டி தங்களது மொபைல் போன் கடையைத் திறந்து வைத்திருந்ததாக குற்றம் சாட்டி காவல் துறையால் கைது செய்யப்பட்டனர். விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட பின்னர், போலீஸ் கஸ்டடியில் இருக்கும்போதே இருவரும் உயிரிழந்தது தமிழக அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன. ஜெயராஜ் மற்றும் பென்னிஸின் மரணத்துக்கு நீதி கேட்டு, மாநிலம் தழுவிய அளவில் நாளை முழு கடையடைப்பு நடத்தப் போவதாக அறிவித்துள்ளது தமிழ்நாடு வணிகர் சங்கம்.
நேற்று பிரேதப் பரிசோதனை முடிந்து ஜெயராஜ் மற்றும் பென்னிஸ் குடும்பத்தினரிடம் உடல்கள் கொடுக்கப்பட்ட போது, அதை வாங்க மறுத்தனர். போலீஸ் கஸ்டடியில் இருக்கும்போது இருவரும் கடும் சித்திரவதைக்கு உள்ளாகினர் என்றும், கைது செய்த காவல் துறையினர் மீது கொலை வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்றும் கூறி அவர்கள் போராட்டம் நடத்தினர்.
“இது இரட்டைக் கொலை. வார்த்தைகளால் சொல்ல முடியாத துன்புறுத்தல் நடந்துள்ளது. ஒரு பெண்ணாக அது குறித்து என்னால் விவரிக்கக்கூட முடியாது. போலீஸ் மீது கொலை வழக்குப் பதிவு செய்யும் வரை நாங்கள் உடல்களை வாங்கப் போவதில்லை,” என்று திட்டவட்டமாக தெரிவித்தார் ஜெயராஜின் மகள் பெர்சிஸ்.
ஜெயராஜ் மற்றும் பென்னிஸ் மீது போலீஸின் புகார்படி பதிவு செய்யப்பட்டுள்ள எப்.ஐ.ஆர்-ல், ‘இருவரும் சாலையில் புரண்டதால் அவர்களின் உடலில் உள்காயம் ஏற்பட்டது. போலீஸாரை அவர்கள் திட்டியதோடு மட்டுமல்லாமல் கொலை செய்வோம் என்றும் மிரட்டினர்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் மீது கிரிமினல் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
வெள்ளிக் கிழமை மாலைவாக்கில் கைது செய்யப்பட்ட ஜெயராஜ் மற்றும் பென்னிஸை அடுத்த நாள் காலை வரை போலீஸ் துன்புறுத்தியுள்ளதாக பகிரங்க குற்றச்சாட்டு சுமத்துகிறது அவர்களது குடும்பம்.
சப்-ஜெயில் ஒன்றில் வைக்கப்பட்டிருந்த இருவரில் பென்னிஸ்தான் முதலில் நெஞ்சு வலிப்பதாக தெரிவித்துள்ளார். அவரை மருத்துவமனை அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு அவரது உயிர் பிரிந்துள்ளது. பென்னிஸின் தந்தை ஜெயராஜ், தனக்கு கடும் காய்ச்சல் இருப்பதாக கூறியுள்ளார். அவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவர் இறந்துள்ளார்.
அடுத்தடுத்த பெரும் புதிர்களாகவே இருக்கும் இந்த சம்பவம் பற்றி தூத்துக்குடி போலீஸ் தலைவர் அருண் பாலகோபாலன், “நாங்கள் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளோம்,” என்று மட்டும் NDTV-யிடம் கூறியுள்ளார்.
இந்த அதிர்ச்சி சம்பவம் தொடர்பான வழக்கை சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை விசாரிக்கிறது. வழக்கு விசாரணையின்போது நீதிமன்றம், ‘இருவரது உடலையும் 3 அரசு மருத்துவவர்கள் பிரேதசப் பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும். உடற்கூராய்வு காணொலிக் காட்சியில் பதிவு செய்யப்பட வேண்டும்,' என்று உத்தரவிட்டுள்ளது.
பிரச்னை பெரிதானதைத் தொடர்ந்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, இறந்த இருவரது குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். அதே நேரத்தில் போலீஸ் துன்புறுத்தல் பற்றி அவர் தன் அறிக்கையில் எதையும் குறிப்பிடவில்லை. ‘நீதிமன்றத்தின் ஆணைக்கிணங்க தமிழக அரசு செயல்படும்' என்று மட்டும் கூறியுள்ளார் எடப்பாடி. இறந்தவர்களின் குடும்பத்துக்குத் தலா 20 லட்ச ரூபாய் நிவாரண நிதியும், குடும்பத்தினர் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்கப்படும் என்று உறுதியளித்துள்ளார் முதல்வர்.
தூத்துக்குடி எம்பியும், திமுகவின் மகளிரணிச் செயலாளருமான கனிமொழி, ‘கோவில்பட்டி சிறையில் தந்தை ஜெயராஜ் உடல்நலக்குறைவு காரணமாகவும், மகன் பென்னிக்ஸ் மூச்சுத் திணறல் காரணமாகவும் உயிரிழந்ததாக முதல்வர் கூறுகிறார். இன்னும் உடற்கூராய்வு முடியவில்லை. அதற்குள் பழனிசாமி அவர்களுக்கு இறப்பின் காரணம் எப்படி தெரிந்தது?' என்று கேள்வி எழுப்பியுள்ளார். இந்த சம்பவம் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
ஸ்டெர்லைட் காப்பர் உற்பத்தி ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தின் போது, தமிழக போலீஸ் துப்பாக்கிச்சூடு நடத்தி 13 பேரை சுட்டுக் கொன்றது. இப்போதைப் போலவே அப்போதும் போலீஸின் நடவடிக்கை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.