ராமதாஸ் முரசொலி இருக்கும் இடத்தை பஞ்சமி நிலமென்று பச்சையாகப் புளுகியிருக்கிறார் - ஸ்டாலின்
முரசொலி அலுவலகம் இருக்கும் இடத்தை பஞ்சமி நிலமென்று, மருத்துவர் அய்யா நிரூபிக்க தவறினால் அரசியலை விட்டு விலகத் தயாரா என பாமக நிறுவனர் ராமதாஸூக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சவால் விடுத்துள்ளார்.
வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்துள்ள அசுரன் படத்தை அண்மையில் தூத்துக்குடியில் உள்ள ஒரு திரையரங்கில் பார்த்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், திரைப்படத்தை வெகுவாக பாராட்டி தனது ட்வீட்டரில் கருத்து வெளியிட்டிருந்தார்.
அதில், பஞ்சமி நில உரிமை மீட்பை மையமாக வைத்து சாதிய சமூகத்தைச் சாடும் - சாதி வன்மத்தை கேள்வி கேட்கும் துணிச்சல்காரன் என்றும் இது படம் மட்டுமல்ல பாடம் என்றும் அதில் தெரிவித்திருந்தார்.
ஸ்டாலினின் இந்த ட்வீட்டர் பதிவு குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று தனது ட்வீட்டரில், அசுரன் கற்றுத் தந்த பாடத்தை ஏற்று, முரசொலி அலுவலகத்திற்காக வளைக்கப்பட்ட பஞ்சமி நிலங்களை உரியவர்களிடம் மு.க.ஸ்டாலின் மீண்டும் ஒப்படைப்பார் என்று நம்புவோம் என நக்கலாக விமர்சித்திருந்தார்.
இந்நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸின் விமர்சனத்திற்கு இன்று பதிலடி கொடுத்துள்ள மு.க.ஸ்டாலின், முரசொலி இடம் தொடர்பான நகல் ஆவணத்தையும் ட்வீட்டரில் வெளியிட்டுள்ளார். மேலும், இதுகுறித்து மு.க.ஸ்டாலின் தனது ட்வீட்டர் பதிவில், மருத்துவர் ராமதாஸ், தற்போது முரசொலி இருக்கும் இடத்தை பஞ்சமி நிலமென்று பச்சையாகப் புளுகியிருக்கிறார்.!
அது பஞ்சமி நிலமே அல்ல; வழி வழியாகத் தனியாருக்குச் சொந்தமாகப் பாத்தியப்பட்ட பட்டா- மனை! நான் சொல்வது பொய்; அது பஞ்சமி நிலம் என்று மருத்துவர் அய்யா நிரூபித்தால் நான் அரசியலை விட்டு விலகத் தயார்!
அவர் சொல்வதை நிரூபிக்கத் தவறி, அது பச்சைப் பொய்யென்றால், அவரும், அவர் மகனும் அரசியலை விட்டு விலகத் தயாரா? இவ்வாறு அவர் கூறியுள்ளார்.