பத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
New Delhi: சவுதி அரேபியாவில் இஸ்லாமியர்களின் புனித நகரமான மதினா அருகே நிகழ்ந்த பேருந்து விபத்தில் புனித யாத்திரை சென்ற வெளிநாட்டவர்கள் 35 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 4 பேர் படுகாயமடைந்துள்ளனர். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது ட்வீட்டர் பதிவில் கூறும்போது, சவுதி அரேபியாவின் மெக்கா அருகே நடந்த பேருந்து விபத்து செய்தி அறிந்து அதிர்ச்சியடைந்தேன். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக்கொள்கிறேன். மேலும், விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன் என்று அவர் கூறியுள்ளளார்.
இதேபோல், விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தனது இரங்கலை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது ட்விட்டரில் அவர் கூறியதாவது, "இன்று சவுதி அரேபியாவில் ஏற்பட்ட துயரமான பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்த விபத்தில் இந்தியர்கள் யாரும் சிக்கியுள்ளார்களா என்பது குறித்த விவரங்களை அறிய எங்கள் துணைத் தூதரகத்திடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது என்று அவர் கூறியுள்ளார்.
இந்த விபத்து தொடர்பாக, மதினா காவல்துறை செய்திதொடர்பாளர் கூறும்போது, மேற்கு சவுதி அரேபியாவிற்கு அருகே, ஒரு தனியார் பயணிகள் பேருந்து, கனரக வாகனத்தின் மீது மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் அரபு மற்றும் ஆசிய நாட்டை சேர்ந்த யாத்ரீகர்கள் என்று உள்ளூர் ஊடகங்கள் தகவல் தெரிவிக்கின்றன. மேலும், உள்ளூர் ஊடகங்கள் வெளியிட்டுள்ள அந்த புகைப்படங்களில் பேருந்து தீ பிடித்து எரிகிறது. அதிலிருந்து ஜன்னலை உடைத்து பயணிகள் வெளியேற்றப்படுகின்றனர்.
இதைத்தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்த வந்த போலீசாரும் மீட்பு படையினரும், காயமடைந்தவர்களை மீட்டு அல்ஹம்னா மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். தொடர்ந்து, இந்த விபத்து குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சவுதி அரேபியாவுக்கு புனித யாத்திரை மேற்கொள்ள ஏராளமான வெளிநாட்டுச் சுற்றுலா பயணிகள் வருவதை தருவது வழக்கம். முன்னதாக, கடந்த 2017ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில், மினி பேருந்து ஒன்றில் சென்ற 2 மாத கைக்குழந்தை உட்பட பிரிட்டிஷ் நாட்டை சேர்ந்த 6 பேர் மதினா அருகே விபத்தில் உயிரிழந்தனர்.
இதேபோல், கடந்த 2018ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில், மதினா அருகே சென்று கொண்டிருந்த பேருந்து ஒன்று எண்ணை லாரி மீது மோதி விபத்துக்குள்ளானதில், பேருந்தில் சென்ற பிரிட்டிஷ் நாட்டை சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர். மேலும், 12 பேர் படுகாயமடைந்தனர்.