யெஸ் வங்கி பண மோசடி விவகாரம்: அனில் அம்பானிக்கு அமலாக்கத்துறை சம்மன்!!
ஹைலைட்ஸ்
- அனில் அம்பானிக்கு அமலாக்கத்துறை சம்மன்!
- யெஸ் வங்கியில் பெற்ற கடன்கள் தொடர்பாக விசாரிக்கப்பட உள்ளார்.
- மும்பையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராக உத்தரவு
New Delhi: யெஸ் வங்கி பண மோசடி விவகாரம் தொடர்பாக ரிலையன்ஸ் குழுமத் தலைவர் அனில் அம்பானிக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மும்பையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகும் படி, அம்பானிக்கு அனுப்பப்பட்டுள்ள நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தனியார் வங்கியான யெஸ் வங்கி அண்மையில் கடும் நிதி நெருக்கடிக்கு உள்ளாகியுள்ள நிலையில், அந்த வங்கியை ரிசர்வ் வங்கி தனது கட்டுப்பாட்டுக் கீழ் கொண்டுவந்துள்ளது. இதைத்தொடர்ந்து, வாடிக்கையாளர்கள் மாதத்திற்கு ரூ.50,000க்கு மேல் பணம் எடுக்க முடியாது என ரிசர்வ் வங்கி கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
இந்நிலையில், யெஸ் வங்கியில் பெற்ற கடன்கள் தொடர்பாக அனில் அம்பானி விசாரிக்கப்பட உள்ளார். எனினும், உடல்நிலைகளைக் காரணம் காட்டி அனில் அம்பானி அதிகாரிகள் முன்பு ஆஜராக மேலும் கால அவகாசம் கோரியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதைத்தொடர்ந்து, மற்ற ரிலையன்ஸ் குழும அதிகாரிகளும் இந்த வார இறுதியில் விசாரணைக்கு அழைக்கப்படுவார்கள் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரிசர்வ் வங்கி திடீர் கட்டுபாடு விதித்ததன் காரணமாக யெஸ் வங்கி வாடிக்கையாளர்களுக்கு கடும் நெருக்கடி நிலை ஏற்பட்டது. இந்த சமயத்தில் இணைய வங்கி சேவையை பயன்படுத்துவதிலும், யுபிஐ வழியாக பணம் செலுத்துவதிலும், ஏடிஎம்களில் பணம் எடுப்பதிலும் கடும் சிரமம் ஏற்ப்பட்டது.
இதன் காரணாக யெஸ் வங்கியில் நடப்புக் கணக்கு வைத்திருப்பவர்கள் தங்கள் கடன்களைச் செலுத்துவதிலும், சம்பளம் வழங்குவதிலும் கடுமையான பிரச்சினைகளை எதிர்கொள்வதாக புகார் அளித்துள்ளனர். இதேபோல், ஹோலி பண்டிகையின்போது தொழிலாளர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியவில்லை என்றும் பலர் புகார் தெரிவித்தனர்.