தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்தை அரசுடைமையாக்கும் மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து அண்ணா பல்கலைக்கழகத்தை நிர்வாக வசதிக்காக 2-ஆக பிரிக்கும் சட்ட முன்வடிவு சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது
கொரோனா நெருக்கடிக்கு மத்தியில் மூன்று நாள் சட்டப்பேரவை கூட்டம் நேற்று முன்தினம் தொடங்கி நடைபெற்று வருகின்றது. இறுதி நாளான இன்று, துணை நிதி நிலை அறிக்கை தாக்கல், சட்ட முன்வடிவு தாக்கல், கேள்வி-பதில், நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
சென்னை கிண்டியில் செயல்பட்டு வரும் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் தமிழகம் முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இந்நிலையில் நிர்வாக வசதியை கருத்தில் கொண்டு அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரிக்கும் சட்டமசோதாவை தாக்கல் செய்துள்ளார் அமைச்சர் கே.பி.அன்பழகன். மாநிலம் முழுவதும் உள்ள இணைப்புக் கல்லூரிகளை நிர்வாகம் செய்ய வசதியாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
அதே போல வேலூர் மாவட்டத்தில் உள்ள திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தினை இரண்டாக பிரித்து விழுப்புரம் மாவட்டத்தில் புதிய பல்கலைக்கழகம் ஒன்று உருவாக்கப்படும் என்றும், அது நடப்பு ஆண்டு முதல் செயல்படும் என்றும் முதல்வர் தெரிவித்துள்ளார்.