ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் ஏஜென்ட் என்று ஹசாரேவை அவரது எதிர்ப்பாளர்கள் விமர்சித்து வருகின்றனர்.
Ahmednagar: மத்தியில் லோக்பால் மாநிலங்களில் லோக் ஆயுக்தா அமைக்க வலியுறுத்தி உண்ணா விரதம் இருந்து வரும் சமூக ஆர்வலர் அன்னா ஹசாரேவின் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த இரு கோரிக்கைகளை வலியுறுத்தி அன்னா ஹசாரே கடந்த 30-ம்தேதியில் இருந்து உண்ணாவிரதம் இருந்து வருகிறார். லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா அமைப்புகள் மூலம் ஊழலை ஒழிக்க முடியும் என்று ஹசாரே நம்புகிறார்.
2 நாட்களாக உண்ணா விரதத்தை தாக்குப்பிடித்த அவரது உடல்நிலை, 3-வது நாளில் படுத்து விட்டது. இதையடுத்து மருத்துவ குழுவினர் ஹசாரேவின் உடல்நிலையை பரிசோதித்தனர். இதில் ரத்த அழுத்தம், ரத்தத்தில் சர்க்கரையின் அளவு உள்ளிட்டவை அதிகரித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இருப்பினும் அன்னா ஹசாரே தனது உண்ணாவிரதத்தை தொடர்ந்து வருகிறார். அவரை விமர்சித்துள்ள தேசியவாத காங்கிரஸ் கட்சி, ஹசாரே ஆர்.எஸ்.எஸ். மற்றும் பாஜகவின் ஏஜென்ட் என்று கூறியுள்ளது.
ஹசாரேவுக்கு தற்போது 81 வயது ஆகிறது. சொந்த ஊரான ராலேகான் சித்தியில் அவர் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.