தனது சொந்த கிராமமான ரலேகான்சித்தியில் இருந்து உண்ணா விரதத்தை தொடங்குகிறார் ஹசாரே
Mumbai: மத்தியில் ஆளும் பாஜக அரசு ஊழல் தடுப்பு அமைப்பான லோக்பாலைக் கொண்டு வரவில்லை என்று சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே குற்றம் சாட்டியுள்ளார். லோக்பாலை அமைக்க வலியுறுத்தி அவர் உண்ணா விரதப் போராட்டத்தை ஜனவரி 30-ம்தேதி முதல் தொடங்கப்போவதாக அறிவித்திருக்கிறார்.
இதுகுறித்து அன்னா ஹசாரே வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது-
நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் லோக்பால் மசோதா கடந்த 2013 டிசம்பரிலும், லோக் அயுக்தா மசோதா ஜனவரி 2014-லும் நிறைவேற்றப்பட்டது. ஆனால் இது நடந்து 5 ஆண்டுகள் ஆன பின்னரும் லோக்பால் சட்டத்தை மத்திய அரசு கொண்டு வரவில்லை.
ஓராண்டுக்குள் அனைத்து மாநிலங்களும் லோக் அயுக்தா சட்டத்தை கொண்டு வந்திருக்க வேண்டும் ஆனால் அதுபோன்று எதுவும் நடக்கவில்லை. எனவே நான் எனது சொந்த ஊரான மகாராஷ்டிர மாநிலம் ரலேகான்சித்தியில் ஜனவரி 30-ம்தேதி உண்ணா விரதப் போராட்டத்தை தொடங்க உள்ளேன்.
இவ்வாறு அன்னா ஹசாரே கூறியுள்ளார்.