இனி அண்ணா பல்கலைக்கழக மாணவர்கள் அடுத்தடுத்த செமஸ்டர்களில் அரியர் தேர்வெழுதலாம்.
ஹைலைட்ஸ்
- முன்னர் அரியர் எழுத பல கட்டுப்பாடுகளை விதித்திருந்த அண்ணா பல்கலை
- இதையடுத்து, மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர்
- இந்நிலையில், விதிகள் தளர்த்தப்பட்டுள்ளன
மாணவர்களின் தொடர் எதிர்ப்பை அடுத்து, அரியர் எழுத இருந்த கட்டுப்பாடுகளை தளத்தியுள்ளது அண்ணா பல்கலைக்கழகம்.
சென்னை, கிண்டியில் இருக்கும் அண்ணா பல்கலைக்கழகம் தமிழக அளவில் பொறியியல் கல்லூரிகளை நிர்வகித்து வருகிறது. சில தனியார் பல்கலைக்கழகங்களைத் தவிர பெரும்பான்மையான பொறியியல் கல்லூரிகள் அண்ணா பல்கலைக்கழகம் நிர்ணயிக்கும் விதிமுறைகளின் கீழ்தான் இயங்கி வருகின்றன.
சமீபத்தில், மாணவர்கள் அரியர் எழுதுவதில் பல விதிமுறை மாற்றங்களை செய்தது அண்ணா பல்கலை. அதற்கு மாணவர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்தது. சில வாரங்களுக்கு முன்னர் நூற்றுக்கும் மேற்பட்ட பொறியியல் மாணவர்கள், அண்ணா பல்கலைக்கழகம் முன்பு போராட்டத்தில் குதித்தனர். இதையடுத்து பல்கலை-யின் அதிகாரிகள் மாணவர்களிடம் சமாதானப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அவர்கள், ‘சீக்கிரமே உங்கள் கோரிக்கைகள் குறித்து நடவடிக்கை எடுக்கப்படும்' என்று உறுதியளித்தனர். இதனால் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கலைந்து சென்றனர்.
தற்போது மாணவர்களின் வேண்டுகோளை ஏற்று அரியர் எழுத முன்பிருந்த கட்டுப்பாடுகளைத் தளர்த்தியுள்ளது அண்ணா பல்கலைக்கழகம். இனி அண்ணா பல்கலைக்கழக மாணவர்கள் அடுத்தடுத்த செமஸ்டர்களில் அரியர் தேர்வெழுதலாம். மாணவர்களின் எதிர்ப்பையடுத்து பல்கலைக்கழகம் இம்மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது. இதன்படி இனி முதல் செமஸ்டரில் அரியர் வைக்கும் மாணவர் அரியர் பாடங்களுக்கான தேர்வினை ஓராண்டு கழித்து எழுத வேண்டியதில்லை. அதேபோல் அரியர் எத்தனை இருந்தாலும் அதனை அடுத்த செமஸ்டரில் எழுதலாம். 2019-20 கல்வியாண்டில் சேரும் மாணவர்கள் இனி முதலாம் ஆண்டு முதல் செமஸ்டரில் அரியர் இல்லாமல் இருந்தால் மட்டுமே 4வது ஆண்டில் பயில அனுமதிக்கப்படுவார்கள்.