"கட்சிக்கு முழுமையாக கட்டுப்பட்டு நான் நடந்து கொள்வேன். தமிழகத்தில் கட்சியின் வளர்ச்சிக்காக பாடுபடுவேன்."
முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை, சில நாட்களுக்கு முன்னர் பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டார். பாஜகவின் தேசியப் பொதுச் செயலாளர் முரளிதர் ராவ் மற்றும் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் ஆகியோர் முன்னிலையில் டெல்லியில், தன்னை அக்கட்சியோடு இணைத்துக் கொண்டார் அண்ணாமலை. இந்நிலையில் அவருக்கு தமிழக பாஜகவின் துணைத் தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
இது குறித்து பாஜகவின் மாநிலத் தலைவர் எல்.முருகன் வெளியிட்டுள்ள அறிவிக்கையில், “தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில துணைத் தலைவராக முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை அவர்கள் நியமிக்கப்படுகிறார். தங்களுடைய பணி சிறக்க வாழ்த்துகள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
தமிழகத்தின் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் அண்ணாமலை. 2011 ஆம் ஆண்டு ஐபிஎஸ் பிரிவைச் சேர்ந்த அண்ணாமலை, 2013 ஆம் ஆண்டு, கர்நாடகாவின் உடுப்பி மாவட்டத்தில் ஏஎஸ்பி-யாக தன் பணியை ஆரம்பித்தார். தொடர்ந்து 2019 ஆம் ஆண்டு மே மாதம் வரை, கர்நாடகாவில் அவர் பல்வேறு பொறுப்புகளை வகித்தார்.
பின்னர் அரசியலில் ஆர்வம் கொண்டதால் ஐபிஎஸ் பணியை துறந்தார். குறிப்பாக தமிழக அரசியலில் ஈடுபட உள்ளது குறித்து அண்ணாமலை, பல்வேறு ஊடகங்களுக்கு அளித்த நேர்காணலில் தெளிவுபடுத்தியிருந்தார். ஆனால், எந்தக் கட்சியோடு இணைய உள்ளார் என்பது குறித்து அவர் ஸ்திரமான பதிலைத் தரவில்லை.
அதே நேரத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் வளர்ச்சியை அவர் வெளிப்படையாக பாராட்டியிருந்தார். சாதாரண பின்புலத்திலிருந்து நாட்டின் பிரதமராக உயர்ந்ததற்காக பிரதமர் மோடியை அவர் பாராட்டியிருந்தார். அதேபோல பாஜகவுக்கு ‘நல்ல கட்சி' என்று சான்றளித்திருந்தார். மேலும், பாஜக தலைமையிலான மத்திய அரசு கொண்டு வந்த பல்வேறு திட்டங்களை வரவேற்றுப் பேசியிருந்தார்.
பாஜகவில் இணைந்த பிறகு அண்ணாமலை, “பாஜகவில் நான் எந்த வித எதிர்பார்ப்பும் கோரிக்கைகளையும் வைக்காமல்தான் இணைந்துள்ளேன். கட்சிக்கு முழுமையாக கட்டுப்பட்டு நான் நடந்து கொள்வேன். தமிழகத்தில் கட்சியின் வளர்ச்சிக்காக பாடுபடுவேன். நான் இனி பாஜகவின் அடிப்படைத் தொண்டன்” என்றார்.