ஊரடங்கு குறித்த முடிவை காலதாமதம் செய்யாமல் முன்கூட்டியே அறிவியுங்கள்: மு.க.ஸ்டாலின்
ஹைலைட்ஸ்
- ஊரடங்கு குறித்த உரிய முடிவை காலதாமதம் செய்யாமல் முன்கூட்டியே அறிவியுங்கள்
- அத்தியாவசியப் பொருட்களை இலவசமாக வழங்க வேண்டும்
- மாஸ்க், சானிட்டைசர் போன்றவற்றையும் இலவசமாக வழங்கிட வேண்டும்.
தமிழகத்தில் ஊரடங்கு குறித்த உரிய முடிவை இனியும் காலதாமதம் செய்யாமல் முன்கூட்டியே அறிவியுங்கள் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடிதம் அனுப்பியுள்ளார்.
தற்போது நாடு முழுவதும் நடைமுறையில் உள்ள 21 நாள் ஊரடங்கு 18 நாட்களைக் கடந்துள்ளது. கொரோனா நோய்த்தொற்று இந்திய அளவிலும், தமிழகத்திலும் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் இன்னும் வரவில்லை. பாதிப்புக்கு உள்ளாவோரின் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருவதும் துயரமளிக்கிறது. தமிழகத்தில் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் கொரோனா பாதிப்பில் தமிழகம் தொடர்ந்து 2வது இடத்தில் உள்ளது.
இந்நிலையில், கொரோனா வைரஸ் தடுப்பு தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு திமுக தலைவரும், தமிழக எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அதில், தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பா என்பது பற்றிய முடிவைத் தாமதிக்காமல் அறிவிக்க வேண்டும். கொரோனா சமூக பரவலுக்கு உட்பட்டுவிட்டதா என்பது பற்றி தமிழக அரசும் மத்திய அரசும் முரண்பட்ட தகவலைக் கூறுகின்றன. ஊரடங்கால் பாதிக்கப்படுவோரின் வாழ்வாதாரத்துக்குத் தேவையானவற்றை உறுதி செய்ய வேண்டும்.
விரைவு பரிசோதனை கருவிகள் இல்லாததால் முழு பாதிப்பு தெரியாமல் மக்கள் அச்சப்படுகின்றன. கொரோனா நோய் பேரிடரிலிருந்து தமிழக மக்கள் மீள்வதற்கு நடவடிக்கை தேவை. ஏழை மக்கள் அன்றாட நடவடிக்கைகளைத் தொடர ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். தனிமனித இடைவெளியுடன், தனித்திருத்தலைமட்டும்தான் மக்களால் செய்ய முடிந்தது. மற்றவை அனைத்தையும் அரசுதான் ஏற்று செய்து தர வேண்டும்.
பாதிப்புக்குப்பட்டிருக்கும் பெரும்பான்மை மக்களுக்கு வாழ்வாதாரத்தை அளிக்க வேண்டியது அரசின் கடமையே ஆகும். சிறப்பு நிவாரணத் தொகுப்பினை இது வரை அறிவிக்கவில்லை. குறைந்தபட்சம் ரூ.5,000 ரொக்கம் மற்றும் அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை இலவசமாக வழங்க வேண்டும். அவற்றுடன் கொரோனா நோய்த் தொற்று பரவாத வகையில் மாஸ்க், சானிட்டைசர் போன்றவற்றையும் இலவசமாக வழங்கிட வேண்டும்.
மேலும், எம்எல்ஏக்களின் தொகுதி நிதியில் தலா ரூ.1 கோடியை பிடித்தம் செய்வது கண்டிக்கத்தக்கது. எம்எல்ஏக்களின் தார்மிகு உரிமையைத் தமிழக அரசு பறித்திருப்பது சரியல்ல. அரசின் கையில் இருக்கும் ஒவ்வொரு நொடியும் கோல்டன் ப்ரீயட்தான், அதை சரியாக பயன்படுத்தியாக வேண்டும்.
மத்திய அரசிடம் நிதி கேட்டு கடிதம் எழுதுவதோடு மாநில அரசின் கடமை முடியவில்லை. கேட்ட நிதியைப் பெறுவதற்கு ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளைத் தமிழக அரசு முனைய வேண்டும். எம்.பி தொகுதி நிதி ரத்து செய்திருப்பதைத் தமிழக அரசு கண்டிக்க வேண்டும். திமுக முழு ஒத்துழைப்பு அளிக்கும் என்பதை மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.