நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் வேட்பாளரை அறிவிக்க வேண்டிய அவசியமே இல்லை எனறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ் கட்சி கூறியுள்ளது.
அமெரிக்காவில் அதிபர் வேட்பாளரை அறிவித்து அங்கு அதிபர் தேர்தல் நடக்கும். இந்தியாவில் கடந்த முறைதான் பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடி அறிவிக்கப்பட்டு தேர்தல் நடந்தது. இதில் மோடி வெற்றி பெற்றார்.
அதனைத் தொடர்ந்து வெவ்வேறு மாநிலங்களில் முதல்வர் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு தேர்தல்கள் நடத்தப்படுகின்றன. சென்னையில் நடந்த கருணாநிதி சிலை திறப்பு விழாவின்போது, காங்கிரஸ் கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தியை திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்தார்.
இந்த நிலையில், இந்தியாவில் பிரதமர் வேட்பாளரை அறிவிக்க வேண்டிய அவசியம் ஏதும் இல்லை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூறியுள்ளது. மதுரையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி கூறியதாவது-
இந்திய ஜனநாயக முறைப்படி தேர்தலுக்கு பின்னர்தான் பிரதமர் தேர்வு செய்யப்பட வேண்டும். எனவே தேர்தல் நடப்பதற்கு முன்பாக பிரதமர் வேட்பாளரை அறிவிப்பது என்பது தேவையற்றது. மக்களவை தேர்தல் என்பது பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டவர்களுக்கு இடையே நடப்பது அல்ல.
ஒவ்வொரு மக்களவை தொகுதியிலும் தேர்தல் நடக்கும். அவர்கள்தான் பிரதமரை தேர்வு செய்வார்கள். அதுதான் நமது அரசியலமைப்பு நமக்கு சொல்லிக் காட்டியிருக்கும் வழிமுறை.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.