கடனைத் திரும்பப் பெறுவது மிகவும் கடினம் என்பது எஸ்பிஐக்குப் புரிந்துள்ளது. அதனால்தான் தற்போது சிபிஐயின் உதவியை எஸ்பிஐ வங்கி நாடியுள்ளது.
New Delhi: ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கி மற்றும் பல இந்திய வங்கிகளிடம் சுமார் 400 கோடி ரூபாய்க்கு மேல் கடன் பெற்றுத் தப்பியோடிய நிறுவனம் குறித்து செய்தி தற்போது வெளியே வந்துள்ளது. டெல்லியை மையமாக வைத்து செயல்பட்டு வந்த பாஸ்மதி அரிசி ஏற்றுமதியாளர் ராம் தேவ் இன்டர்நேஷனல் லிமிடெட் நிறுவனம்தான், பணமோசடியில் ஈடுபட்டுள்ளது என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ராம் தேவ் இன்டர்நேஷனல் லிமிடெட் கடந்த 2016 ஆம் ஆண்டு, சுமார் 400 கோடி ரூபாய் கடன் பெற்று திருப்பி செலுத்தாமல் இருந்த நிலையில், தற்போதுதான் அது குறித்து சிபிஐயிடம் புகார் அளித்துள்ளது எஸ்பிஐ வங்கி.
2016 ஆம் ஆண்டு அந்நிறுவனத்தை ‘நான் பெர்ஃபார்மிங் அசட்' என்னும் வரையறைக்குள் கொண்டுவந்தது எஸ்பிஐ. கடந்த பிப்ரவரி மாதம்தான் எஸ்பிஐ வங்கி, சிபிஐயிடம் ராம் தேவ் இன்டர்நேஷனல் லிமிடெட் குறித்துப் புகார் தெரிவித்துள்ளது. இந்நிலையில் கடந்த ஏப்ரல் 28 ஆம் தேதி, அந்நிறுவனத்துக்கு எதிராக அதிகாரப்பூர்வமாக வழக்குத் தொடர்ந்துள்ளது சிபிஐ.
ராம் தேவ் இன்டர்நேஷனல் லிமிடெட், எஸ்பிஐ வங்கியிடம் 173.11 கோடி ரூபாய் கடனும், கனரா வங்கியிடம் 76.09 கோடி ரூபாயும், யூனியன் பாங்க் ஆஃப் இந்தியா வங்கியிடம், 64.31 கோடி ரூபாயும், சென்ட்ரல் பாங்க் ஆஃப் இந்தியா வங்கியிடம் 51.31 கோடி ரூபாயும், கார்ப்பரேஷன் வங்கியிடம் 36.91 கோடி ரூபாயும், ஐடிபிஐ வங்கியிடம் 12.27 கோடி ரூபாயும் கடன் வாங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது. மொத்தமாக ராம் தேவ் இன்டர்நேஷனல் லிமிடெட் நிறுவனம், 414 கோடி ரூபாய் கடன் வாங்கியுள்ளது.
எஸ்பிஐ அளித்தப் புகாரைத் தொடர்ந்து, சிபிஐ, ராம் தேவ் இன்டர்நேஷனல் லிமிடெட் நிறுவனத்தின் இயக்குநர்களான நரேஷ் குமார், சுரேஷ் குமார், சங்கீதா மற்றும் பெயர் குறிப்பிடப்படாத பொது சேவை ஊழியர்களின் மேல் வழக்குத் தொடர்ந்துள்ளது. பணமோசடி, ஏமாற்றுதல், ஊழல் செய்தல் உள்ளிட்டப் பல பிரிவுகளுக்குக் கீழ் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
எஸ்பிஐ, சிபிஐயிடம் அளித்தப் புகாரின் நகலை NDTV பெற்றுள்ளது. “லிக்வுடிட்டி பிரச்னைகள் காரணமாக, ராம் தேவ் இன்டர்நேஷனல் லிமிடெட் நிறுவனம், 27.01.2016 ஆம் தேதி, 173.11 கோடி ரூபாய் கடனுடன் என்பிஏ (NPA) என அறிவிக்கப்படுகிறது.
வங்கியிலிருந்து பணம் பெற்று அந்நிறுவனம் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளது.
கடன் பெற்ற நிறுவனத்தின் நிர்வாகிகள், புகார் குறித்து ஹரியானா போலீஸ் நடத்திய விசாரணையின் போது ஆஜராகவில்லை. எங்கள் விசாரணையில் அவர்கள் நாட்டைவிட்டுத் தப்பியோடிவிட்டதாக தகவல் வந்துள்ளது,” எனத் தெரிவித்துள்ளது.
ராம் தேவ் இன்டர்நேஷனல் லிமிடெட் நிறுவனத்தின் உரிமையாளர்கள் காணாமல் போனது சென்ற ஆண்டுதான் உறுதி செய்யப்பட்டது என்று கூறும் எஸ்பிஐ, தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்தில் அந்நிறுவனத்துக்கு எதிராக (NCLT) தொடரப்பட்ட வழக்கில் இத்தகவலை தெரிந்து கொண்டதாக கூறியுள்ளது.
என்சிஎல்டி-யில் கடந்த ஆண்டு, முஸ்ஸாடி லால் கிருஷ்ணா லால் என்னும் நிறுவனம், ராம் தேவ் இன்டர்நேஷனல் லிமிடெட் நிறுவனம் தங்களுக்கு 30 லட்ச ரூபாய் தராமல் ஏமாற்றிவிட்டதாக வழக்குத் தொடர்ந்தது. இந்த வழக்கு விசாரணையின்போது, 2018 மே மாதம் முதல், ராம் தேவ் இன்டர்நேஷனல் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாகிகளுக்கு நேரில் ஆஜராகும்படி 3 முறை சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. ஆனால், அவர்கள் எங்கிருக்கிறார்கள் என்பது கண்டுபிடிக்க முடியவில்லை. 2018 ஆம் ஆண்டு டிசம்பரில், அவர்கள் அனைவரும் துபாய்க்குத் தப்பியோடி விட்டதாக உறுதி செய்யப்பட்டது. அதன் பின்னர் அவர்களுக்கு என்னவானது என்பது குறித்து தகவல் இல்லை.
ராம் தேவ் இன்டர்நேஷனல் லிமிடெட் நிறுவனத்தினர், நாட்டைவிட்டுத் தப்பித்துச் செல்லும் முன்னர் தங்களுக்கு சொந்தமான சொத்துகளை விற்றுள்ளனர். இதைத் தொடர்ந்துதான், கடனைத் திரும்பப் பெறுவது மிகவும் கடினம் என்பது எஸ்பிஐக்குப் புரிந்துள்ளது. அதனால்தான் தற்போது சிபிஐயின் உதவியை எஸ்பிஐ வங்கி நாடியுள்ளது.
எஸ்பிஐயிடம் இது குறித்து விளக்கம் கேட்க NDTV முயன்றது. ஆனால் இதுவரை பதில் பெறமுடியவில்லை.