சாத்தான்குளம் உதவி ஆய்வாளர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன் ஆகியோர் கடுமையாக தாக்கியதாக ராஜாசிங் புகார் தெரிவித்துள்ளார்.
சாத்தான்குளம் உதவி ஆய்வாளர்கள் மீது மேலும் ஒரு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது!
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் கடந்த 19ம் தேதி, செல்போன் கடை நடத்தி வந்த ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் ஊரடங்கு சமயத்தில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி கடையை திறந்த காரணத்திற்காக
போலீசாரால் கைது செய்யப்பட்டுனர்.
தொடர்ந்து, அவர்கள் சிறையில் வைத்து போலீசாரால் சித்தரவதைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இதைத்தொடர்ந்து, படுகாயங்களுடன் கோவில்பட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர்கள் இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.
நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட போலீசார் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தினர்.
சாத்தான்குளம் பகுதியை சேர்ந்த ராஜாசிங் என்பவர், ஒரு கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு கோவில்பட்டி கிளை சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு உடல்நிலை பாதிக்கப்பட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் சாத்தான்குளம், தந்தை மகன் மரணம் தொடர்பாக விசாரணை நடத்திய தூத்துக்குடி தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் இவரிடமும் விசாரணை நடத்தியுள்ளார்.
அப்போது தன்னையும் சாத்தான்குளம் உதவி ஆய்வாளர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன் ஆகியோர் கடுமையாக தாக்கியதாக ராஜாசிங் புகார் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து ராஜாசிங் புகார் குறித்தும் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த சாத்தான்குளம் போலீஸாருக்கு, தூத்துக்குடி தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் உத்தரவிட்டார். அதன்பேரில் உதவி ஆய்வாளர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன் ஆகிய இருவர் மீதும் சாத்தான்குளம் போலீஸார் மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.