Coronavirus: வெளிநாடுகளில் இருந்து வரும் விமான நிலையங்களுக்கு வரும் அனைத்து பயணிகளையும் சோதனை செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது.
ஹைலைட்ஸ்
- சுகாதார அமைச்சர் ஹர்ஷ்வர்தன், ராஜய்சபாவில் கொரோனா குறித்து பேசியுள்ளார்
- இந்தியாவில் 30 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்
- பேடிஎம் ஊழியர் ஒருவரும் கொரோனாவால் பாதிப்படைந்துள்ளார்
New Delhi: இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 30 ஆக உயர்ந்துள்ளது. இன்று புதியதாக ஒருவருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன், இன்று ராஜ்யசபாவில், கொரோனா வைரஸ் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விளக்கினார்.
கடைசியாக பேடிஎம் நிறுவனத்தைச் சேர்ந்த ஒரு ஊழியருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டிருந்தது. இதனால் குர்கானில் உள்ள அந்நிறுவனத்தில் அலுவலகம் 2 நாட்களுக்கு மூடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் குறித்துப் பேசிய அமைச்சர் ஹர்ஷ் வர்தன், “நம் முன்னால் புதிய சவால்கள் இருக்கின்றன… ஆக்ராவில் ஒரு தனி சிகிச்சைப் பிரிவை உருவாக்கியுள்ளோம். இந்தியாவில் யாத்திரை மேற்கொண்டுள்ளவர்கள் பற்றியும் ஈரானில் இருக்கும் மாணவர்கள் பற்றியும் நாங்கள் அதிக கவலை கொள்கிறோம். ஈரான் அரசுடன் இது குறித்துத் தொடர்ந்து பேசி வருகிறோம்.
உலக சுகாதார அமைப்பும் இந்த வைரஸ் தொற்றை அபாயகரமானது என்று விவரித்துள்ளது. அனைத்து நாடுகளும் உஷாராக இருக்கச் சொல்லியிருக்கிறது உலக சுகாதார அமைப்பு. மார்ச் 4 ஆம் தேதி வரை நம் நாட்டில் 29 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது,” என்றார். தற்போது இன்னொருவருக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. இதனால் மொத்தமாகப் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 30 ஆக உயர்ந்துள்ளது.
இத்தாலியிலிருந்து வந்த சுற்றுலாப் பயணிகள் 15 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டதே இந்த எண்ணிக்கை அதிகரிக்க முக்கிய காரணம். இதையடுத்து, வெளிநாடுகளிலிருந்து வரும் விமான நிலையங்களுக்கு வரும் அனைத்து பயணிகளையும் சோதனை செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது.
கடந்த மாதம் இத்தாலியிலிருந்து ராஜஸ்தானுக்குச் சுற்றுலா வந்த 23 பேர் கொண்ட குழுவினரைச் சேர்ந்தவர்கள் தான் தற்போது வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள 16 பேரும். தற்போது இவர்கள் அனைவரும் டெல்லியில் தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர். மேலும், இக்குழுவைச் சேர்ந்த இருவரும் ஜெய்ப்பூரில் தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர்.
முன்னதாக குறிப்பிட்ட 12 நாடுகளில் மட்டுமல்லாமல், சர்வதேச விமானங்களிலிருந்து நாட்டில் தரையிறங்கும் அனைத்து பயணிகளையும் தீவிரமாகச் சோதனை செய்ய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் உத்தரவிட்டுள்ளார். கடந்த 2 மாதத்தில் மட்டும், 21 விமான நிலையங்களில் 5,89,000 மக்கள் சோதனை செய்யப்பட்டுள்ளனர்.
இந்தியா, தற்போது அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்துள்ளது. இதற்காக இத்தாலி, ஈரான், தென்கொரியா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட நாடுகளிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதில் அதிகாரிகளுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதேபோல், சீனா, ஈரான், தென்கொரியா மற்றும் இத்தாலி உள்ளிட்ட நாடுகளுக்கு மக்கள் பயணம் செய்ய வேண்டாம் என சுகாதாரத்துறை அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது. இதேபோல், மற்ற இதர நாடுகளுக்கும் தேவையில்லாத பயணத்தைத் தவிர்க்குமாறும் சுகாதாரத்துறை கேட்டுக்கொண்டுள்ளது.
தொடர்ந்து, கூட்டமாகக் கூடுவதைத் தவிர்க்குமாறு பள்ளிகளுக்கு, சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. கடந்த 28 நாட்களில் பள்ளியில் ஊழியர்கள் அல்லது மாணவர்கள் யாரெனும், கொரோனா பாதிப்புக்கு உள்ளான நாடுகளுக்குப் பயணம் செய்து வந்தவர்களும் 14 நாட்களுக்கு வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு இருக்க வேண்டும் என சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. மேலும், ஏதேனும் அறிகுறிகள் தென்பட்டாலும் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.