உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 90 ஆயிரத்தை கடந்துள்ளது.
New Delhi: இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 31-ஆக உயர்ந்துள்ளது. இந்த 31-வது நபர் தாய்லாந்து, மலேசியா நாடுகளுக்குச் சென்று வந்திருப்பது தெரியவந்துள்ளது. தற்போது அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், அவரது உடல்நிலை சீராக இருக்கிறது என்றும் சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மக்கள் பொது இடங்களில் கூடுவதைத் தவிர்க்குமாறு மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. முதன் முதலில் கொரோனா வைரஸ் சீனாவின் வுஹான் மாகாணத்தில் உள்ள மீன் மார்க்கெட்டிலிருந்து பரவத் தொடங்கியது.
இந்த செய்தி தொடர்பான 10 முக்கிய தகவல்கள்...
1. இந்தியாவில் 30 பேருக்கு கொரோனா பாதிப்பு இருந்த நிலையில், தற்போது மேலும் ஒருவருக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் எண்ணிக்கை 31 ஆக உயர்ந்துள்ளது. அந்த நபர் மலேசியா, தாய்லாந்து நாடுகளுக்குச் சென்று வந்துள்ளார்.
2. நாட்டில் மொத்தம் 30 விமான நிலையங்களில் கொரோனா வைரஸ் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
3. மக்கள் கூடுவதால்தான் கொரோனா அதிகளவு பரவி வருவதாக வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். எனவே முடிந்தவரை மக்கள் கூடுவதைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
4. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பிரமதர் நரேந்திர மோடி தனது ஐரோப்பிய யூனியன் கூட்டத்தை ஒத்தி வைத்துள்ளார்.
5. பாதிக்கப்பட்டுள்ள 16 இத்தாலியச் சுற்றுலாப் பயணிகள் டெல்லியில் கட்டாய மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். கடந்த மாதம் ராஜஸ்தானுக்கு 23 இத்தாலிய பயணிகள் சென்றபோது பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது.
6. முன்னெச்சரிக்கையாக டெல்லியில் அனைத்து பள்ளிகளும் மார்ச் 31-ம்தேதி வரையில் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
7. அண்டை நாடான பூட்டானில் முதன் முறையாக ஒருவர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார். இந்தியாவிலிருந்து சென்ற அந்த 76 வயது முதியவருக்குக் கடந்த 5-ம்தேதி கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
8. பூட்டானுக்குச் சென்ற 8 இந்தியர்கள் கட்டாய மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.
9. கொரோனா தாக்குதலில் எதிரொலியாக இந்தியப் பங்குச் சந்தைகள் சென்செக்ஸ் 1400 புள்ளிகள் சரிந்தது. சர்வதேசச் சந்தைகளும் கொரோனா தாக்குதலுக்குத் தப்பவில்லை.
10. சுமார் 211 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு ஆசிய பசிபிக், ஜப்பான், ஹாங்காங். சிங்கப்பூர், ஆஸ்திரேலியா நாடுகளில் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.