This Article is From Jun 29, 2020

ஜெயராஜ்- பென்னிக்ஸ் போல போலீஸ் துன்புறுத்தலால் இறந்த 3வது நபர்!?- அதிரவைக்கும் தென்காசி பின்னணி

Tamil Nadu: இந்த சம்பவம் தொடர்பாக ஒரு துணை ஆய்வாளர் மீதும் ஒரு கான்ஸ்டபிள் மீதும் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

ஜெயராஜ்- பென்னிக்ஸ் போல போலீஸ் துன்புறுத்தலால் இறந்த 3வது நபர்!?- அதிரவைக்கும் தென்காசி பின்னணி

Kumaresan, an auto driver, died at a government hospital on Saturday.

ஹைலைட்ஸ்

  • தென்காசியில் இச்சம்பவம் நடந்துள்ளது
  • இரு காவலர்கள் மீது சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது
  • சம்பந்தப்பட்ட நபர் நேற்று முன்தினம் உயிரிழந்துள்ளார்
Chennai:

தூத்துக்குடியில் போலீஸ் கஸ்டடியில் ஏற்பட்ட துன்புறுத்தல் காரணமாக ஜெயராஜ் - பென்னிக்ஸ் இறந்தார்கள் என்று குற்றம் சுமத்தப்பட்டு, தமிழகமே தகித்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், தென்காசியிலும் இதைப் போன்ற ஒரு சம்பவத்தால் ஒருவர் இறந்துள்ளார் என்னும் தகவல் அதிர்ச்சியைக் கிளப்பியிருக்கிறது. போலீஸ் விசாரணைக்குப் பின்னர் சுமார் ஒரு மாதம் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த அந்த நபர், நேற்று முன்தினம் காலமானார். 

குமரேசன் என்னும் 30 வயதுடைய ஆட்டோ ஓட்டுநர், ஒரு பிரச்னை தொடர்பாக உள்ளூர் காவல் நிலையத்திற்கு வருமாறு உத்தரவிடப்பட்டிருந்தது. அவர் போலீஸ் நிலையத்தில் ஆஜரான பின்னர் அங்கு அவரை காவலர்கள் பலமாக தாக்கியுள்ளதாக தெரிகிறது. 

போலீஸ் விசாரணைக்குப் பின்னர் குமரேசன் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் காயங்களுடன் அனுமதிக்கப்பட்டார். அதையடுத்து, பல நாட்களாக சிகிச்சைப் பெற்று வந்த குமரேசன், உயிரிழந்துள்ளது பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. 

குமரேசனின் தந்தை இந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட போலீஸ் தலைவருக்கு அளித்தப் புகாரில், “குமரேசனின் பிறப்புறுப்பு கொடூரமாக தாக்கப்பட்டது. அவர் தொடை மீது உதவி ஆய்வாளர் மற்றும் கான்ஸ்டபிள்கள் ஏறி நின்றுள்ளனர். முதுகு பக்கம் அவரை பலமாக தாக்கியுள்ளனர். லத்தி கொண்டும் அதிக தாக்குதல்கள் தொடுக்கப்பட்டது,” என்று குறிப்பிட்டுள்ளார். 

இந்த போலீஸ் துன்புறுத்தல் கடந்த மே மாதம் 10 ஆம் தேதி நடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலில் தனியார் மருத்துவமனையில் முருகேசனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். 

இந்த சம்பவம் தொடர்பாக ஒரு துணை ஆய்வாளர் மீதும் ஒரு கான்ஸ்டபிள் மீதும் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்குத் தொடர்பான விசாரணையானது வேறு மாவட்டத்திலிருந்து வரும் போலீஸ் அதிகாரி மூலம் மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இது குறித்து தென்காசி போலீஸ் தலைவர் சுகுனா சிங், “இந்த விவகாரம் தொடர்பாக டிஐஜி விரைவில் ஒரு புலனாய்வு அதிகாரியை நியமிப்பார். அவர் என் கட்டுப்பாட்டில் இருக்க மாட்டார். இந்த விசாரணையில் வெளிப்படைத்தன்மை வேண்டும் என்று நினைக்கிறோம். அதன் மூலம் எந்த சந்தேகமும் வராது. இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட இரண்டு போலீஸையும் நாங்கள் டிரான்ஸ்ஃபர் செய்து விடுவோம். இந்த சம்பவத்தில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் இருவர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,” என்றுள்ளார். 

தமிழகத்தில் தொடர்ந்து அதிகரித்து வரும் இதைப் போன்று சம்பவங்கள் பற்றி திமுக தலைவரும், தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், “தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மொத்த மாநிலத்தையும் காவல் துறையிடம் ஒப்படைத்து விட்டாரா? அவன் என்ன செய்து கொண்டிருக்கிறார்?” எனக் கேள்விகள் எழுப்பியுள்ளார். 

தமிழகத்தில் மட்டுமல்ல இந்திய அளவில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ள தந்தை- மகன் ஜெயராஜ் - பென்னிக்ஸ் மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணை செய்ய பரிந்துரை செய்துள்ளது தமிழக அரசு. இருவரும் போலீஸ் கஸ்டடியில் இருந்தபோது தொடுத்த தாக்குதல்களால் உயிரிழந்தனர் என்று ஜெயராஜ் குடும்பத்தினர் அரசுக்கு அளித்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர். 

அதே நேரத்தில் ஜெயராஜ்- பென்னிக்ஸ் மீது பதிவு செய்யப்பட்டு எப்ஐஆரில், ‘கடந்த ஜூன் 19 ஆம் தேதி கொரோனா வைரஸ் ஊரடங்கு உத்தரவையும் மீறி கடையைத் திறந்து வைத்திருந்ததால் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த சம்பவம் தொடர்பாக 4 போலீஸார் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது வழக்குப் பதிவும் செய்யப்பட்டுள்ளது. 

(With inputs from PTI)

.