எம்.ஜே. அக்பர் மீது 10-க்கும் அதிகமான பெண் பத்திரிகையாளர்கள் பாலியல் புகார் தெரிவித்துள்ளனர்.
New Delhi: மத்திய வெளியுறவு இணை அமைச்சராக இருக்கும் எம்.ஜே. அக்பர், இந்த பொறுப்புக்கு வருவதற்கு முன்பாக பல்வேறு இதழ்களில் ஆசிரியராக பணியாற்றியுள்ளார்.
அந்த காலகட்டங்களில் பெண் பத்திரிகையாளர்களுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக புகார்கள் தெரிவிக்கப்பட்டு வருகிறது. இந்த புகாரை 14 பத்திரிகையாளர்கள் கூறியுள்ளனர். அவர்களில் முதலில் புகார் தெரிவித்த பிரியா ரமணி என்பவர் மீது மான நஷ்ட வழக்கை அக்பர் தொடர்ந்திருக்கிறார்.
அவர் பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. இதனை அவர் பொருட்படுத்தவில்லை. இந்த நிலையில், 15-வது பெண்ணாக மற்றொரு நபர் அக்பர் மீது பாலியல் குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.
துஷிதா படேல் என்கிற அந்தப் பெண், தி எசியான் ஏஜ் பத்திரிகையில் அக்பர் ஆசிரியராக இருந்தபோது அங்கு பணியாற்றியிருக்கிறார். அப்போது அக்பர் பாலியல் தொந்தரவு அளித்ததாக துஷிதா புகார் கூறியுள்ளார். இதுகுறித்து இணையதளம் ஒன்றில் கட்டுரை எழுதியுள்ளார். அதில், “எம்.ஜே. அக்பர் வலுக்கட்டாயமாக இருமுறை முத்தம் கொடுத்தார். ஒருமுறை ஓட்டல் அறையில் தங்கிருந்த அவர் உள்ளாடையுடன் என்னை வரவேற்றார்.
இன்றைக்கு அக்பர் செய்த தவறுகளைப் பற்றி நான் பேசாவிட்டால் அவர் செய்த குற்றங்களுக்கு நான் உடந்தையாக இருந்ததை போன்று ஆகிவிடும். இதற்கு முன்பாக 1992-ல் இன்னொரு பத்திரிகையில் வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது, என் தொலைப்பேசி என்னைப் பெற்றுவிட்டு தேவையின்றி என்னை அழைப்பார். ஒருமுறை வேலை விஷயமாக அவரை ஹோட்டல் அறையில் சந்தித்தபோது, வலுக்கட்டாயமாக எனக்கு முத்தம் கொடுத்தார். அவரை உதறி கத்திவிட்டு சாலைக்கு ஓடிச் சென்றேன். அங்கு ஆட்டோவில் ஏறியதும் அழத் தொடங்கினேன். இதேபோன்ற சம்பவம் அடுத்த நாள் காலையிலும் ஏற்பட்டது. ” என்பது உள்ளிட்ட தகவல்கள் அந்த கட்டுரையில் இடம்பெற்றுள்ளது.
மேலும் துஷிதா அந்த கட்டுரையில், பொய் பேசுவதை அக்பர் நிறுத்திக் கொள்ள வேண்டும். அவருக்கு எதிரான போதுமான ஆதாரங்கள் எங்களிடம் உள்ளன. அவரை நீதிமன்றத்தில் சந்திக்கிறோம். நாங்கள் யாரையும் குழப்பவில்லை. நாங்கள் பேச வேண்டிய நேரம் வந்து விட்டது என்றும் குறிப்பிட்டுள்ளார்.