கோவையில் பல்வேறு இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை
Coimbatore: தமிழகத்திற்குள் தீவிரவாதிகள் புகுந்துள்ளதாக தகவல்கள் வந்த நிலையில், கோவையில் இன்று காலை முதல் பல்வேறு இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
தமிழகத்திற்குள் தீவிரவாதிகள் புகுந்துள்ளதாக கடந்த சில நாட்களாக பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. இதனால், கோவை, ராமேஸ்வரம், உள்ளிட்ட பகுதிகளில் பலத்த பாதுகாப்பும் அளிக்கப்பட்டது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பலத்த சோதனைகள் நடைபெற்று வரும் நிலையில், கோவை உக்கடம், கரும்புக்கடை, பிலால்நகர் உள்ளிட்ட சில இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஐ.எஸ். சித்தாந்தத்தை பரப்பியதாகக் கூறி கடந்த மே மாதம் கோயம்புத்தூரில் இருந்து 5 பேர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக இந்த சோதனைகள் நடத்தப்பட்டதாக என்ஐஏ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்த 5 பேரில், சந்தேகத்திற்கிடமான தலைவரான முகமது அசாருதீன், இலங்கை குண்டு வெடிப்பு பயங்கரவாதி ஜக்ரைன் ஹசீமின் வீடியோவை பரப்பிய குற்றத்துக்காக மேலும் விசாரணை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
ஏற்கனவே கடந்த 3 மாதங்களுக்கு முன்பு இவர்கள் 5 பேர் வீடுகளிலும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் ரகசியமாக சோதனை நடத்தியுள்ளனர். இந்நிலையில் மீண்டும் அவர்களது வீடுகளில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
இவர்களுக்கு லஷ்கர்-இ-தொய்பா அமைப்புடன் தொடர்பு உள்ளதா என்பது குறித்தே என்ஐஏ அதிகாரிகள் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.