அனுபம் கேரின் ராஜினாமா கடிதம் தொடர்பான அறிவிப்பை மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சகம் வெளியிடவில்லை.
எஃப்.டி.டி.ஐ. எனப்படும் இந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி கழகம் மகாராஷ்டிர மாநிலம் புனேவில் செயல்பட்டு வருகிறது.இதன் தலைவர் பொறுப்பில் மூத்த பாலிவுட் நடிகர் அனுபம் கேர் நியமிக்கப்பட்டிருந்தார்.
இந்த நிலையில், திடீரென அவர் தனது ராஜினாமா அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். இதுதொடர்பாக மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் ராஜ்யவர்தன் சிங் ரத்தோருக்கு அனுபம் கேர் கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது-
எஃப்.டி.ஐ.ஐ. தலைவர் பொறுப்பில் இருந்து ராஜினாமா செய்வது தொடர்பாக இந்த கடிதத்தை எழுதுகிறேன். எனது பொறுப்பையும், எனக்கு இருக்கும் கடமையையும் உணர்ந்து இந்த முடிவை எடுத்துள்ளேன்.
இந்த பதவிக்கு என்னை நியமனம் செய்வதற்கு முந்தைய மத்திய தகவ்ல மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி என்னை அணுகினார். அப்போது, சர்வதேச நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக நான் அமெரிக்காவில் 6 மாத காலம் இருக்க வேண்டியது வரும் என்று தெரிவித்தேன்.
இப்போது, சர்வதேச டிவி தொடர் முடிவதற்கு இன்னும் 4 மாதங்கள் ஆகும் என தெரிகிறது. இதனால் 2018-19-ம் ஆண்டுகளில் சுமார் 9 மாதங்களுக்கு நான் அமெரிக்காவில் இருக்க வேண்டியது வரும். இதேபோன்று அடுத்தடுத்த நாட்களிலும் நான் வெளிநாடுகளில் படப்பிடிப்புகளுக்காக செல்ல உள்ளேன்.
எனவே, எனக்கு அளிக்கப்பட்டிருக்கும் எஃப்.டி.ஐ.ஐ. தலைவர் பொறுப்பு என்பது சரியான முடிவாக இருக்காது என கருதுகிறேன். செயல்பாட்டில் இல்லாமல் இந்த பொறுப்பை வகிப்பதற்கு எனக்கு விருப்பம் இல்லை.
எனவே எனது ராஜினாமா கடிதத்தை அளித்திருக்கிறேன். இந்த பொறுப்புக்கு தகுதி வாய்ந்த நபரை நியமிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். இதுதொடர்பாக எந்தவொரு ஆலோசனை வழங்கவும் என்னை எப்போதும் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அனுபம் கேர் தெரிவித்துள்ளார்.