This Article is From Nov 25, 2018

கேரளாவை போராட்ட பூமியாக்க யார் நினைத்தாலும் அது நடக்காது: பினராயி விஜயன்

கேரளாவை போராட்ட பூமியாக்க யார் நினைத்தாலும் அது நடக்காது என கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

கேரளாவை போராட்ட பூமியாக்க யார் நினைத்தாலும் அது நடக்காது: பினராயி விஜயன்

சபரிமலையில் அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பை தொடர்ந்து கேரளா முழுவதும் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளது. முக்கியமாக நிலக்கல் வரை மட்டுமே பக்தர்களின் வாகனங்கள் அனுமதிக்கப்படுகிறது. அங்கிருந்து பேருந்தில்தான் பக்தர்கள் செல்ல வேண்டும்.

இந்நிலையில், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், சபரிமலையில் சாமி தரிசனம் செய்துவிட்டு திரும்பியபோது அவரது காரை நிறுத்தி காவல்துறையினர் சோதனை மேற்கொண்டனர். இதைத்தொடர்ந்து கேரள காவல்துறையினர் பொன்.ராதாகிருஷ்ணனை அவமதித்து விட்டதாக கூறி குமரியில் நேற்று பாஜக சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது.

இந்த விவகாரம் குறித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறுகையில், சபரிமலையில் பாதுகாப்பு பணியில் காவல்துறையினர் சரியான முறையில் நடந்து வருகிறார்கள். அங்கு வன்முறையில் ஈடுபடுபவர்கள் மீதுதான் காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். சபரிமலை பிரச்னையை வைத்து கேரளாவை போராட்ட பூமியாக்க யார் நினைத்தாலும் அது நடக்காது.

சபரிமலை சென்ற மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனிடம் காவல்துறை அதிகாரி யதீஷ் சந்திரா அவமரியாதையாக நடக்கவில்லை. தன்னுடன் வந்த அனைத்து வாகனங்களையும் பம்பைக்கு அனுமதிக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் கேட்டதால்தான் அவருடன் காவல்துறையினர் வாக்குவாதத்தில் ஈடுபடும் நிலை உருவானது. அதில் எந்த தவறுமில்லை. கேரளாவில் உள்ள காவல்துறை அதிகாரிகள், வெளி மாநிலத்தில் இருந்து இங்கு வந்து பணியாற்றுபவர்கள். அவர்கள் குடும்பத்தினர் வீடுகள் மீது தாக்குதல் நடத்த ஆர்எஸ்எஸ் திட்டமிட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது என்றார்.

.